உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேன்சருக்கான மருந்துகள் தயாரிக்க பெரிதும் உதவும் மரபணு; தரவுகளை வெளியிட்டது சென்னை ஐ.ஐ.டி.,

கேன்சருக்கான மருந்துகள் தயாரிக்க பெரிதும் உதவும் மரபணு; தரவுகளை வெளியிட்டது சென்னை ஐ.ஐ.டி.,

சென்னை: ''சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட, பாரத் புற்றுநோய் மரபணு தரவுகள் வாயிலாக, மரபணு மாற்றங்களால் ஏற்படும் புற்றுநோய்களுக்கு தகுந்த படி மருந்துகள் தயாரிக்க முடியும்,'' என, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறினார்.உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, சென்னை ஐ.ஐ.டி.,யில் நேற்று, 'பாரத் புற்றுநோய் மரபணு தரவு' என்ற அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையை வெளியிட்டு, காமகோடி பேசியதாவது:

இந்தியாவில், 10 பேரில் ஒருவருக்கு, புற்றுநோய் இருப்பது தெரிகிறது; தற்போது, 14 முதல், 15 லட்சம் பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கான சிகிச்சைகள், வெளிநாட்டு மருத்துவ முறையில் உள்ளன.புற்றுநோய் பாதிப்புக்கான மரபணு ரீதியான காரணத்தை கண்டறிய, புற்றுநோய் மரபணு திட்டத்தை, 2020ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி., துவங்கியது. இத்திட்டத்தின் கீழ், இந்தியாவில் முதல்முறையாக, உலகில் இரண்டாவது முறையாக, புற்றுநோய் மரபணு தரவு தளத்தை வெளியிட்டுஉள்ளோம்.

ஏற்றுக்கொள்ளாது

இந்தியாவில், புற்றுநோய் எப்படி பாதிக்கும்; மரபணுவில் ஏற்படும் மாற்றம் குறித்து, வெளிநாட்டு தரவுகள் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்குள்ள மருந்துகள் சிலருக்கு ஏற்றுக்கொள்ளும்; சிலருக்கு ஏற்றுக்கொள்ளாது; சிலருக்கு பாதி அளவே ஏற்றுக்கொள்ளும். ஒரு மருந்து, அந்த நோயை குணப்படுத்தும் என்பது, இந்தியாவில் சாத்தியம் இல்லாத ஒன்றாக உள்ளது. கேன்சர் வருவதற்கான காரணம் மற்றும் எந்த மாதிரி வருகிறது என்பது தொடர்பாக, ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபாடு உள்ளது. இதை கண்டறிய, தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள, 500 மார்பக புற்றுநோயாளிகளிடம் இருந்து, 960 மரபணு மாதிரிகள் எடுத்து, ஆய்வு செய்துள்ளோம்.

வேறுபாடு

அதில், புற்றுநோய் இல்லாத மரபணு, புற்று நோய் பாதித்த மரபணுவை சேகரித்து, அதில் உள்ள வேறுபாடுகளை கண்டறிந்துள்ளோம். இந்த ஆய்வை முடிக்க, 12 ஆண்டுகளாகின. பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது இது முதல் முறை. இதை வைத்து மரபணு மாற்றங்களால் ஏற்படும் புற்றுநோய்களுக்கு தகுந்தவாறு, மருந்துகள் தயாரிக்க முடியும். எல்லாருக்கும் ஒரே மருந்தாக இல்லாமல், அவரவர் மரபணு மாற்றத்துக்கு ஏற்ப மருந்துகள் கொடுத்து, குணப்படுத்த முடியும். அதிதீவிரமடையும் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளை குறைக்க முடியும். இந்த மரபணு பரிசோதனை வாயிலாக, புற்றுநோய் வருவதை முன்கூட்டியே கண்டறிந்தும் தடுக்க முடியும். இந்த தரவுகள், மருத்துவ துறைக்கும், மருந்துகள் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.சென்னை ஐ.ஐ.டி., மற்றும் கார்கினோஸ் ஹெல்த்கேர் இணைந்து, தேசிய புற்றுநோய் மருத்துவ மையத்தின் கீழ், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்ச கத்தின் கீழ் உள்ள, அறிவியல் தொழில்நுட்பத்துறை அளித்த ஆதரவுக்கு நன்றி.அதிக இடங்களில் புற்றுநோய் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என, மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதுபோன்று அமைக்கும் போது, குறைந்த கட்டணத்தில் அதிகம் பேர் சிகிச்சை பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

'உணவு, உடற்பயிற்சி முக்கியம்'

ஐ.ஐ.டி., 'பயோடெக்னாலஜி' துறை பேராசிரியர் மகாலிங்கம் பேசியதாவது:ஆரோக்கியமாக வாழ உணவு, உடற்பயிற்சி மிக முக்கியம். அதுபோல, புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும், வந்த பின் பாதுகாப்பதற்கும், உணவும், உடற்பயிற்சியும் மிகவும் அவசியம். இதுகுறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். கொரோனா பாதிப்புக்கு பின், புற்றுநோய் அதிகரித்துள்ளதா என்ற தரவுகள் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம். இதனால், சாதாரண சளி, காய்ச்சல் போன்ற நோய்கள், பல நாட்கள் நீடிக்கின்றன. புற்றுநோய் குறித்து கண்டறியும் மரபணு சோதனை செய்ய, 5,000 ரூபாய் வரை செலவாகும். இப்போது, மார்பக புற்றுநோய் நோயாளிகளின் மரபணு மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்துள்ளோம். அடுத்து, இதர வகை புற்றுநோய் பாதிப்புக்கான மரபணு மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Iniyan
பிப் 04, 2025 10:49

எல்லாம் எப்போதோ வந்து விட்டது .


Kasimani Baskaran
பிப் 04, 2025 06:59

சரித்திரம் படைத்தது இருக்கிறார்கள்.. பாராட்டுக்கள்.


புதிய வீடியோ