‘சர்வர்’ பிரச்னைக்கு தீர்வு காண ஐ.ஐ.டி.,யை நாடும் பதிவுத்துறை
சென்னை: பதிவுத்துறை இணையதளத்தை, ஒரே சமயத்தில், அதிகமானோர் பயன்படுத்தும்போது ஏற்படும் சர்வர் பிரச்னையை தீர்க்க, சென்னை ஐ.ஐ.டி.,யின் உதவியை, பதிவுத்துறை உதவி நாடி உள்ளது. தமிழகத்தில், 589 சார் –பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பத்திரப்பதிவு பணிகள் நடக்கின்றன. வழக்கத்தைவிட, சுபமுகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் அதிகமானோர் பத்திரப்பதிவுக்கு வருகின்றனர். இவ்வாறு ஒரே சமயத்தில், அதிக எண்ணிக்கையில் மக்கள் இணையதளத்தை பயன்படுத்தும்போது, பத்திரப்பதிவுக்கான ‘சர்வரின்’ இயக்க வேகம் குறைகிறது. இதனால், பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல், பொது மக்கள் திணறும் நிலை ஏற்படுகிறது. இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சில சமயங்களில், இணையதள ‘சர்வர்’ வேகக் குறைபாடு குறித்து புகார்கள் வருகின்றன. இதையடுத்து, பதிவுத்துறை இணையதள சர்வரின் தொழில்நுட்பத்தை மேம்பாடுத்தும் வகையில், 1.66 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கும். மேலும், ஒரே சமயத்தில் அதிகமானோர் பயன்படுத்தினாலும், சர்வர் தொய்வின்றி இயங்குவதற்கான வழிமுறைகளை அறிய, சென்னை ஐ.ஐ.டி., உதவியை நாடி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.