மேலும் செய்திகள்
தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
08-Nov-2025
சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தொழிலதிபர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகி வீடு, அலுவலகம் என, 15 இடங்களில் நேற்று, அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, கே.கே.நகர் லட்சுமணன் சாமி சாலையைச் சேர்ந்தவர் மஹாவீர். இவர், மொத்த நகை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனி, தெற்கு மாட தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன்; ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கீழ்ப்பாக்கம் வேடலஸ் சாலையைச் சேர்ந்த நிர்மல்குமார், கட்டுமான நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு இரும்பு மற்றும் ஸ்டீல் கம்பிகள் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சென்னை, எம்.ஜி.ஆர்., நகர் அண்ணா பிரதான சாலையைச் சேர்ந்தவர் மகாத்மா சீனிவாசன். இவர், ரியல் எஸ்டேட் தொழிலுடன், காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைகள் பிரிவின் மாநில தலைவராகவும் உள்ளார். சென்னை சவுகார்பேட்டை, கந்தப்ப முதலி தெருவைச் சேர்ந்த சுனில், வடபழனி வ.உ.சி., இரண்டாவது பிரதான சாலையைச் சேர்ந்த ராகேஷ் ஆகியோர், பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர். நகை, இரும்பு மற்றும் ஸ்டீல் மொத்த வியாபாரம் மற்றும் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வரும் மஹாவீர் உள்ளிட்ட தொழிலதிபர்கள், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர். தொடர் விசாரணையில், இவர்கள் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தொழிற்பேட்டைகள் அமைக்க, நிலம் கையகப்படுத்திய விவகாரத்திலும் தலையிட்டுள்ளனர். இவர்கள் வாயிலாக, கோடிக்கணக்கான ரூபாய்க்கு சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதையும், அமலாக்கத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அதன் அடிப்படையில், சென்னை, அம்பத்துார், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர்கள் வீடு மற்றும் அலுவலகம் என, 15 இடங்களில் நேற்று, அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
08-Nov-2025