பிரபல ஜவுளி கடைகளில் வருமான வரி சோதனை
சென்னை:பிரபல ஜவுளி கடை மற்றும் அதன் உரிமையாளர்கள் தொடர்புடைய இடங்களில், வருமான வரி அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். பிரபல நிறுவனத்தின் ஜவுளி கடைகள் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, நாகர்கோவில், ஸ்ரீவில்லிபுத்துார், சேலம் ஆகிய நகரங்களிலும், கேரளா, கர்நாடக மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனம் ஜவுளி விற்பனை மட்டுமின்றி, தங்க நகை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் மீதான வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, வருமான வரித்துறை விசாரித்து வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல நகரங்களில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் கடைகளில் நேற்று, வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அதன் உரிமையாளர் வீடு, அவரது மகன்கள் வசிக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளனவா என்பது குறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் எந்த தகவலும் வெளியிடவில்லை.