உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியா - இலங்கை கப்பல் சேவை மாணவர்களுக்கு ரூ.9,999ல் திட்டம்

இந்தியா - இலங்கை கப்பல் சேவை மாணவர்களுக்கு ரூ.9,999ல் திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகப்பட்டினம்:''இந்தியா - இலங்கை பயணியர் கப்பல் சேவையால், இரு நாட்டு மக்களிடையே வர்த்தகம் மேம்பட்டுள்ளது. சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்காக 9,999 ரூபாயில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது,'' என, தனியார் கப்பல் நிறுவன இயக்குனர் சுந்தரராஜன் கூறினார். இந்தியா - இலங்கை இடையே வர்த்தகம், சுற்றுலா மேம்பட, நாகையில் இருந்து, இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணியர் கப்பல் சேவையை, கடந்த ஆண்டு, அக்., 14ல் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, இந்திய கப்பல் கழகத்துக்கு சொந்தமான, 'சிரியாபாணி' என்ற கப்பல், சேவையை துவக்கியது. பருவநிலை மாற்றத்தால் சில தினங்களில் சேவை நிறுத்தப்பட்டது. பின், இந்த கப்பல் போக்குவரத்து சேவை, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 150 பேர் பயணிக்கும் வகையில் 'சிவகங்கை' என்ற சிறிய கப்பல், கடந்த ஆண்டு, ஆக., 16ல் முதல் பயணத்தை துவங்கியது. இலங்கைக்கு கப்பல் சேவை துவங்கி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, தனியார் கப்பல் நிறுவன இயக்குனர் சுந்தரராஜன் கூறியதாவது, மாணவர்களையும் சுற்றுலாவில் ஊக்குவிக்கும் விதமாக, 9,999 ரூபாயில் சிறப்பு திட்டம், ஆறு மாத காலத்திற்கு வழங்கப்படுகிறது. இரு இரவுகள், இலங்கையில் தங்கும் வகையிலான பயண திட்டத்தில், டிக்கெட் கட்டணம், உணவு, தங்குமிடம், வாகன வசதி என அனைத்தும் அடங்கும். கொழும்புவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இரவு நேரத்தில் ஒரு ரயில் மட்டுமே சென்று கொண்டிருந்த நிலையில், இந்த கப்பல் போக்குவரத்திற்கு பின், மதியம், 'ஏசி' வசதியுடன் ரயில் இயக்கப்படுகிறது. இரு நாட்டு மக்களும் அதிகளவில் ஆன்மிக பயணம் மேற்கொள்கின்றனர். பயணியர் கப்பல் சேவையால், இரு நாட்டு மக்களிடையே கலாசாரம் வலுவடைந்துள்ளதுடன், வர்த்தகம் மேம்பட்டுள்ளது.கடந்த ஆண்டு 20,000 பேர், இரு நாட்டிற்கு இடையில் பயணம் செய்துள்ளனர். இது, வரும் காலத்தில் இரு மடங்காக அதிகரிக்கும். கொழும்புவில் இருந்தும் யாழ்ப்பாணத்திற்கு அதிகம் பேர் வரத்துவங்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ManiMurugan Murugan
ஆக 17, 2025 19:12

அருமை


xyzabc
ஆக 17, 2025 08:26

வரவேற்க தக்கது. நாகையின் பொருளாதாரம் வளரட்டும். மோடிஜி அய்யாவிற்கு நன்றி. ஸ்டிக்கர் ஒட்டுபவர்களை நிறுத்த முடியாது.