கஞ்சா கடத்தலில் சர்வதேச கும்பல்: பிடிக்க முடியாமல் சுங்கத்துறை திணறல்
                            வாசிக்க நேரம் இல்லையா?
                             செய்தியைக் கேளுங்கள் 
                              
                             
                            
சென்னை: வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதன் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்க முடியாமல், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.சென்னை விமான நிலையத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தபடி உள்ளன. சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபடுவோரை பிடித்து, கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர்.சுற்றுலா விசாவில் வெளி நாடுகளுக்கு செல்வது போல், பலர் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தாலும், அவர்களின் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். புதுப்புது வழிகளில் கடத்தல் நடப்பதால், எந்த வியூகத்தை பயன்படுத்தி பிடிப்பது என்று தெரியாமல், அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.கடந்த ஆக., மாத இறுதியில் இருந்து தற்போது வரை சென்னை விமான நிலையத்தில், 48 கோடி ரூபாய் மதிப்புள்ள, 48 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொதுவாக கைது செய்யப்படுவோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அதிகாரிகள் சிறையில் அடைப்பர். கடத்தல் பின்னணியில் உள்ளவர்களை பிடிக்க, தனி குழு அமைத்து தேடுவர்.ஆனால், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சரியான முயற்சி எடுக்காமல் இருப்பதே, கடத்தல் அதிகரிப்பதற்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வரும் நாட்களில் கஞ்சா புழக்கம் தமிழகத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.