சென்னை : “மத்திய அரசின் திட்டங்களை, 'ஸ்டிக்கர்' ஒட்டி பெயர் மாற்றினர். தற்போது, 'உலக நாயகன்' பெயரையும் மிரட்டி மாற்ற வைத்து விட்டனர்,” என, தமிழக பா.ஜ., மூத்த தலைவரான தமிழிசை தெரிவித்தார்.அவரது பேட்டி:மழை வந்ததும், துணை முதல்வர் உதயநிதி மாநகராட்சி கட்டடத்துக்குச் செல்வார். எல்லாம் சரியாக உள்ளதா என பார்த்துவிட்டு சென்று விடுவார். பின், கஷ்டப்படுவது மக்கள்தான். மழைநீர் சேகரிப்புக்கு என்ன செய்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு, அவரால் பதில் அளிக்க முடியவில்லை. ஏதாவது செய்திருந்தால்தானே கூற முடியும். இவர்கள் அரசியல், விளம்பர அரசியலாக மட்டுமே இருக்கிறது.சென்னையில், 85 சதவீதம் கால்வாய் பணிகள் நிறைவடையவில்லை. திருவொற்றியூர், பள்ளிக்கரணை பகுதிகளில், கால்வாய் வரைபடம் இல்லை. கால்வாய் வரைபடம் இருந்தால் தானே, அதை கண்டுபிடித்து, மழை நீரை வடிய செய்ய முடியும். அரசு துறைகளில் ஒருங்கிணைப்பு இல்லை; சென்னை தத்தளிக்கிறது.ஸ்டாலின் மேயராக இருந்த காலத்திலிருந்து, சென்னை தி.மு.க., வசம் உள்ளது. ஆனால், சிறிது மழை வந்தாலும் நீர் தேங்குகிறது. இந்நிலையில், 'சிங்கார சென்னை' என்கின்றனர்.மத்திய அரசின் திட்டங்களை, 'ஸ்டிக்கர்' ஒட்டி பெயர் மாற்றினர். தற்போது, 'உலக நாயகன்' பெயரையும் மிரட்டி மாற்ற வைத்து விட்டனர். அவர் தி.மு.க.,காரராகவே மாறி விட்டார். தமிழக அரசியலில், மிரட்டல், உருட்டல், பெயர் மாற்றம், ஸ்டிக்கர் ஒட்டுதல் போன்றவைதான் நடக்கிறனவே தவிர, உருப்படியாக எதுவும் நடக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.