விடுதலை புலி ஆதரவாளர்கள் தங்கிய வீடுகளில் விசாரணை
சென்னை: கல்பாக்கம், செங்கல்பட்டு மற்றும் மண்ணடியில், 15 நாட்களாக சட்ட விரோதமாக தங்கியிருந்த, விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள், அந்த இடங்களில் என்னென்ன செய்தனர் என்பது குறித்து, 'கியூ' பிரிவு போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். இலங்கையை சேர்ந்த இசைவேந்தன், 26; யோகராசா, 26; ஜீவராசன், 30 ஆகியோர், 15 நாட்களுக்கு முன், இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் சென்னை மண்ணடி, கல்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். அவர்கள் மீது, இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களாகவும் செயல்பட்டு வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன், மண்ணடியில் தங்கி இருந்த மூவரையும், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு போலீசார் பிடித்து, குடியுரிமைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து, அவர்கள் இலங்கை அனுப்பி வைக்கப்பட்டு அந்நாட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் சென்னையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட இருந்தது தெரிய வந்துள்ளது. எனவே, அவர்கள் தங்கி இருந்த வீடுகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 'கியூ' பிரிவு போலீசார் மீண்டும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூறுகையில், 'இசைவேந்தன் உள்ளிட்ட மூவரும், விடுதலை புலிகள் அமைப்பில் இருந்தது தெரியவந்த நிலையில், அவர்களின் பின்னணியில், சர்வதேச போதைப்பொருள் கும்பல் இருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.