செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையில் முறைகேடு? விசாரிக்க வலியுறுத்தல்
சென்னை:'செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையில் நடந்து வரும் முறைகேடுகளை, உயர்மட்ட குழு அமைத்து, முதல்வர் விசாரணை நடத்த வேண்டும்' என, அதன் முன்னாள் அறங்காவலர் என்.வீரப்பன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலினுக்கு, அவர் அனுப்பியுள்ள மனு: உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி, பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. தற்போது, அறக்கட்டளையில் பல கோடி ரூபாய் முறைகேடுகளை, அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இதுகுறித்த பல்வேறு கடிதங்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை செயலருக்கும், முதல்வரின் தனி செயலருக்கும் அளிக்கப்பட்டன. தமிழ்நாடு வன்னியர் குல ஷத்திரிய 'சாரிட்டபிள் டிரஸ்ட்' தலைவருக்கும் புகார் கொடுத்துள்ளோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அறக்கட்டளைக்கு சொந்தமான, 34 கோடி ரூபாய் வைப்பு தொகை, வங்கியில் இருந்தது. அதில், 14 கோடி ரூபாயை, யாருடைய அனுமதியும் பெறாமல், தன்னிச்சையாக எடுத்து செலவு செய்துள்ளனர். அறக்கட்டளையில் நிர்வாக சீர்கேடுகள், ஊழல், முறைகேடுகள் நாள்தோறும் நடந்து வருகின்றன. இதுகுறித்து முதல்வர், அரசின் நேரடி மேற்பார்வையில் உயர்மட்ட விசாரணை குழு அமைத்து, தவறு செய்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.