அம்மா உணவகங்களுக்கு பாத்திரம் வாங்கியதில் முறைகேடு? மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் குற்றச்சாட்டு
சென்னை:சென்னை மாநகராட்சியில், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், 407 அம்மா உணவகங்கள் துவக்கப்பட்டன. மெட்ரோ ரயில் பணி, சாலை விரிவாக்கம் உள்ளிட்டவற்றால், சில அம்மா உணவகங்கள் மூடப்பட்டு, தற்போது, 386 உணவகங்கள் செயல்படுகின்றன.இந்நிலையில், அம்மா உணவகங்களை, 21 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதில், தலா 2 லட்சம் ரூபாய் மதிப்பில், பழைய பாத்திரங்கள் மாற்றப்பட்டு, புதிய பாத்திரங்கள் வாங்க திட்டமிடப்பட்டது.ஆனால், நீண்ட நாட்கள் தாங்காத தரமற்ற பாத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், மொத்தமாக ஒரு குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு, டெண்டர் விடப்பட்டு வாங்கப்பட்டுள்ளது என, மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.அவர்கள் மேலும் கூறியதாவது:சென்னையில், 2013க்கு பின், பழைய பாத்திரங்களை மாற்ற அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும், 2 லட்சம் ரூபாய் என, 7.72 கோடி ரூபாய் வழங்கியது. அதில், பெரும்பாலான உணவகங்கள் 1.80 லட்சம் முதல் 1.90 லட்சம் ரூபாய் வரை மதிப்பிலான பாத்திரங்களை கொள்முதல் செய்துள்ளன.அதேநேரம், வளசரவாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில் தரமற்ற பாத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. தற்போது, பார்ப்பதற்கு பளிச்சிடும் வகையில் இருந்தாலும், அவை நீண்ட நாட்கள் தாங்குவதற்கு வாய்ப்பில்லை. இந்த மண்டலங்களில், 1.50 லட்சம் ரூபாய்க்குள் வாங்கியிருக்கலாம். அதற்கான ரசீது சமர்ப்பிக்கப்படாமல் உள்ளது.எனவே, சென்னையில் உள்ள 386 அம்மா உணவகங்களில் வாங்கப்பட்ட பாத்திரங்களை மதிப்பீடு, அதற்கான செலவு ஆகியவற்றை மாநகராட்சி தணிக்கை செய்ய வேண்டும். அப்போது தான், முறைகேடு நடந்துள்ளதா என்பது தெரிய வரும்.இவ்வாறு கூறினர்.