சாட்சிகள் வாக்குமூலத்தில் ஜாதி, மதம் தேவைதானா? உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை:கீழமை விசாரணை நீதிமன்றங்களில் சாட்சிகளின் வாக்குமூலத்தில் ஜாதி, மதம் பதிவிடுவதை தவிர்க்கக் கோரி தாக்கலான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரை வழக்கறிஞர் கோகுல் அபிமன்யூ தாக்கல் செய்த பொதுநல மனு:குற்ற வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களில் சாட்சிகளிடம் விசாரணை நடைபெறுகிறது. அவர்களின் வாக்குமூலத்தில் ஜாதி, மதம் பதிவு செய்யப்படுகிறது. முகவரியை பதிவு செய்யலாம்.ஜாதி, மதத்தை குறிப்பிடுவதை அறிந்து நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் அல்லது நீதிமன்ற அலுவலர்கள் யாரேனும் பாரபட்சமாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சாட்சிகளின் ஜாதி, மதம் விபரங்கள், வழக்கில் எந்த பங்கும் வகிப்பதில்லை. அதை அறிந்து கொள்ளாமலேயே கீழமை நீதிமன்றங்கள் வழக்கை முடிக்க இயலும்.உயர் நீதிமன்றங்கள் அல்லது கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுதாரர்களின் வழக்கு ஆவணங்களில் சம்பந்தப்பட்ட நபர்களின் ஜாதி, மதம் இடம் பெறக்கூடாது. இதை, அனைத்து உயர் நீதிமன்றங்களும் உறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனால் கீழமை நீதிமன்றங்கள் சாட்சிகளின் ஜாதி, மதம் விபரங்களை கோரும் நடைமுறையை கைவிடவில்லை; கைவிட உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவ., 4க்கு ஒத்திவைத்தது.