உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற சிபில் ஸ்கோர் தேவையா? சுற்றறிக்கையால் விவசாயிகள் குழப்பம்

கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற சிபில் ஸ்கோர் தேவையா? சுற்றறிக்கையால் விவசாயிகள் குழப்பம்

சென்னை: வட்டி மானிய சலுகைக்காக, 1.50 லட்சம் விவசாயிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகளில் கடன் வாங்கியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு, 'சிபில் ஸ்டேட்மென்ட்' பெற்றும், இதர விவசாயிகளுக்கு ஏற்கனவே இருந்தபடி, வணிக வங்கிகளிடம் இருந்து தடையில்லா சான்று அல்லது சுயசான்று பெற்றும் கடன் வழங்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன், கால்நடை வளர்ப்பு கடன்கள் வழங்கப்படுகின்றன. கடனை குறித்த காலத்தில் செலுத்திவிட்டால், 7 சதவீதம் வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. இதில் மத்திய அரசு, 3 சதவீதம் வட்டி மானியம் வழங்குகிறது. சில விவசாயிகள் வட்டி சலுகைக்காக, கூட்டுறவு சங்கங்கள் மட்டுமின்றி, வணிக வங்கிகளிலும் பயிர் கடன், கால்நடை வளர்ப்பு கடன் பெறுகின்றனர். கடந்த ஆண்டில், 1.50 லட்சம் விவசாயிகள் ஒரே பயிர், நிலத்துக்கு, வட்டி சலுகைக்காக, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் என, இரு இடங்களில் கடன் பெற்றுள்ள விபரத்தை, கூட்டுறவு துறை கண்டறிந்துள்ளது. எனவே, இரு இடங்களில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டும், 'சிபில் ஸ்டேட்மென்ட்' பெற்று உறுதி செய்த பின் கடன் வழங்க, சங்கங்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக, மண்டல இணை பதிவாளர்களுக்கு, இம்மாதம், 17ம் தேதி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'இரு வங்கிகளில் கடன் பெறாத இதர விவசாயிகளுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்கனவே பின்பற்றியபடி வணிக வங்கிகளிடம் இருந்து, தடையில்லா சான்று மட்டும் பெற்று கடன் வழங்கலாம்' என, தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், 'கடந்த ஆண்டுகளில் பயிர் கடன், கால்நடை கடன் வழங்குதலில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளையே நடப்பாண்டிலும் பின்பற்ற வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிபில் ஸ்டேட்மென்ட் தேவையில்லை என்று, எந்த இடத்திலும் கூட்டுறவு சங்க பதிவாளர் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஒரே நிலத்துக்கு, இரு இடங்களில் கடன் வாங்கிய நபர்களுக்கு மட்டும், 'சிபில் ஸ்டேட்மென்ட்' பெறப்பட்டு, கடன் வழங்கப்படும்; அதில், எந்த மாற்றமும் இல்லை. மற்ற விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டுமானால், அவர்கள் வணிக வங்கியிடம் இருந்து தடையில்லா சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது தடையில்லா சான்று கிடைக்காவிட்டால், சம்பந்தப்பட்ட விவசாயி தரும் சுயசான்றை ஏற்று கடன் கொடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பிரச்னை தீர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில், கடன் கேட்கும் விவசாயிகளுக்கு, 'சிபில் ஸ்கோர்' சோதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என, பிரதமர் மோடியிடம், அ.தி.மு.க., சார்பில் மனு அளித்தேன். இதையடுத்து தமிழக அரசு, அந்த சிபில் ஸ்கோர் நடைமுறையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பிரதமரிடம் மனு அளித்த பின், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும், விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி. - பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஜூலை 30, 2025 08:14

ஆம்... பெரிய பெரிய ஆன்லன் கம்பெனிகளில் பொருள் வாங்கி, கிரெடிட் கார்டில் பேமெண்ட் பண்ணி சிபில் ஸ்கோர் ஏத்தி வெச்சிருக்கணும். அப்பத்தான் உனக்கு கடன் வாங்க தகுதி இருக்குன்னு அர்த்தம். டிஜிட்டல் எக்கானமி டா.


ஆரூர் ரங்
ஜூலை 30, 2025 09:11

விவசாய வருமானத்துக்கு வரிவிலக்கு உள்ளதால் பல அரசியல் தொடர்புள்ளவர்கள் போலி குத்தகை நிலங்களை வைத்து பொய் கணக்கு காட்டுகிறார்கள். டிஜிட்டல் முறை ஆய்வு இவர்களை மாட்டி விடுகிறது. விவசாயம் தவிர்த்த வேறு வணிகங்களுக்கு விவசாயக் கடன் வாங்குவதை தடுத்தே ஆகவேண்டும்.


முக்கிய வீடியோ