சென்னை:''வெள்ளத்தில் மிதந்த மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி, ஓட்டு கேட்க மட்டும் வருவது நியாயமா,'' என, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.சென்னையில் நேற்று நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:இன்று பிரதமர் மோடி, கன்னியாகுமரி வரப்போகிறார். தமிழகத்திற்கான சிறப்பு திட்டங்களை உருவாக்கித் தர, அவர் வரவில்லை; ஓட்டு கேட்டு வருகிறார். அதை தவறு என்று சொல்லவில்லை. பிரிவினைவாதி
சென்னை, துாத்துக்குடி, கன்னியாகுமரி வெள்ளத்தில் மிதந்த போது, மக்களை பார்க்க வராத பிரதமர், ஓட்டு கேட்டு மட்டும் வருவது நியாயமா?குஜராத் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, அன்றைய தினமே ஹெலிகாப்டரில் சென்று பார்த்தார்; மறுநாளே நிவாரண நிதி கொடுத்தார். குஜராத்திற்கு ஏன் கொடுத்தீர்கள் என்று நான் கேட்கவில்லை. தமிழகத்திற்கு ஏன் தரவில்லை என்றுதான் கேட்கிறேன்.குஜராத்திற்கு அன்றைய தினமே நிதி தருவதும், தமிழகத்திற்கு மூன்று மாதம் சென்ற பிறகும், நிதி தர மனமில்லாமல் போவதும் ஏன்? இதைக் கேட்டால், நம்மை பிரிவினைவாதி என்று அடையாளம் காட்டுகின்றனர்.ஆட்சிக்கு வந்ததும், முதல் முறையாக பிரதமரை பார்க்கச் சென்ற போது, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிக்கு நிதி கேட்டேன்.இப்போது மூன்று ஆண்டுகளாகிறது. நமக்கு அடுத்து கேட்ட மாநிலங்களுக்கு வழங்குகின்றனர்; நமக்கு ஒன்றும் தரவில்லை.மத்திய அரசுக்கு அதிக வரி வருவாய், தமிழகத்தில் இருந்து போகிறது. நம்முடைய பணம்தான் போகிறது. அதற்கேற்ற மாதிரி திருப்பித் தருவதில்லை. குரல் கொடுக்கின்றனர்
நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், 28 பைசா தான் மறுபடியும் நமக்கு வருகிறது; அதையும் ஒழுங்காகக் கொடுப்பதில்லை.நிதி கேட்டு கடிதம் எழுதுகிறோம். நம்முடைய எம்.பி.,க்கள் எல்லாம் நிதி கொடுங்கள் என, பார்லிமென்டில் குரல் கொடுக்கின்றனர்.அதற்கு பிறகு தான், அந்த 28 பைசாவையும் கொடுக்கின்றனர். இதைச் சொன்னால், நாம் பிரிவினை பேசுகிறோமாம்.பிரிவினை எண்ணம் எங்களுக்கு இல்லை. ஒரு கண்ணில் வெண்ணையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் என்றுதான் பிரதமரிடம் கேட்கிறோம்.தேசபக்தி குறித்து, எங்களுக்கு யாரும் போதிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாட்டுப்பற்று குறித்து எங்களுக்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. இந்தியாவைக் காக்க, எங்களை ஒப்படைத்துக் கொண்டதை, தமிழக மக்கள் நன்கு அறிவர். தமிழகத்தில் கால் பதித்து, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, குரல் கொடுத்து வருகிறோம்.உலகின் தலைசிறந்த கூட்டாட்சி நாடாக, மக்களாட்சி நாடாக, இந்தியா வளர்ந்து வளம்பெற வேண்டும் என்பதற்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
சிறப்பு திட்டங்கள்
தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு, தமிழக மக்களின் ஓட்டு மட்டும் வேண்டும் என்பது என்ன நியாயம்? பத்து ஆண்டுகளில் என்ன சிறப்பு திட்டங்கள், தமிழகத்துக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். பிரதமர் பதில் கூற வேண்டும் என்று மக்கள் கேட்கின்றனர்.தமிழகத்தை சீரழித்த அ.தி.மு.க.,வையும், தமிழகத்தைக் கண்டுகொள்ளாத பா.ஜ.,வையும், மக்கள் நிராகரிக்கத் தயாராகி விட்டனர். இவ்வாறு முதல்வர் பேசினார்.