அணைகளில் உள்ள 174 டி.எம்.சி., குடிநீர், பாசனத்திற்கு போதுமா?
சென்னை:தமிழக அணைகளில், 174 டி.எம்.சி., தண்ணீர் மட்டும் கையிருப்பு உள்ளதால், கோடைக்காலத்தில் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்வதில், சிக்கல் எழுந்துள்ளது.தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 224 டி.எம்.சி., இதில், மேட்டூர், பவானிசாகர், முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட, 15 அணைகள் மட்டும், 198 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டவை. மற்ற அணைகள் 1 டி.எம்.சி.,க்கு குறைவான கொள்ளளவு கொண்டவையாக உள்ளன. 90 அணைகளிலும் சேர்த்து 172 டி.எம்.சி., நீர் மட்டுமே இருப்பு உள்ளது.அதிகபட்சமாக மேட்டூர் அணையில், 79.3 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. மேலும், 23 அணைகளில், நீர் இருப்பு கவலைக்கிடமாக உள்ளது. தற்போதுள்ள நீர், ஜூன் மாதம், தென்மேற்கு பருவமழைக் காலம் துவங்கும் வரை பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்; மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள அணைகள் வாயிலாக, வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் நீர் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும். குறைவான நீர் உள்ளதால், கோடைக்கால பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.