மதுரை: முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், தி.மு.க.,வில் இணைவதாக வெளியாகும் தகவல்களை, 'வதந்தி' என அவர் மறுத்தார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தேனி செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில், அவரிடம், 'செங்கோட்டையன் பின்னணியில் தி.மு.க., செயல்படுவதாக' தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். மேலும், 'அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்குமாறு பா.ஜ., தான் கூறியது' என செங்கோட்டையன் கூறியது பற்றியும் கேள்வி எழுப்பினர். ஆனால், அந்த கேள்விகளுக்கு, பன்னீர் செல்வம் பதில் ஏதும் அளிக்காமல் சிரித்தபடியே சென்றார். இதையடுத்து, பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,வான மனோஜ் பாண்டியன், தி.மு.க.,வில் இணைந்ததை சுட்டிக்காட்டி, 'நீங்களும் தி.மு.க.,வில் இணையப்போவதாக தகவல் வருகிறதே' என பன்னீர் செல்வத்திடம் கேட்டனர். அதற்கு, 'வதந்தி தானே' என பன்னீர் செல்வம் கூறினார். 'கோவில் நகரான மதுரை, அசுத்தமான நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதே' என கேட்டதற்கு, 'அது பற்றி ஆளுங்கட்சியிடம்தான் கேட்க வேண்டும்' என சிரித்துக் கொண்டே கூறினார்.