சென்னை : 'போராடும் பொதுமக்களை பயங்கரவாதிகளை போல் அப்புறப்படுத்தியதை மன்னிக்க முடியாது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:
விழுப்புரம் மாவட்டம், அரசூர் கூட்டுச் சாலை என்ற இடத்தில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், காவல் துறையினரின் அத்துமீறலை கண்டித்து, இருவேல்பட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது, காவல் துறையினர் கடுமையான அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை, ஆண் காவலர்கள் அவமானப்படுத்தும் வகையில் இழுத்துச் சென்று அப்புறப்படுத்தி உள்ளனர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி இளைஞர்களையும், பயங்கரவாதிகளை போல் இழுத்து சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.சில வாரங்களுக்கு முன், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட அமைச்சர் பொன்முடி, இருவேல்பட்டு கிராமப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சேறு வீசினர். இப்படி சேறு வீசியவர்கள், இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை பழி வாங்க வேண்டும்; தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், போலீசார் அவர்கள் மீது அடக்குமுறையை கட்ட விழ்த்து விட்டுள்ளனர். தங்கள் கிராமத்தவர் மீது பொய்யாக வழக்கு போட்டு, பழிவாங்கத் துடிக்கிறது அரசு என்று சொல்லி போராடிய மக்களை, பயங்கரவாதிகள் போல் காவல் துறையினர் வேட்டையாடியதை மன்னிக்க முடியாது. இவற்றை பார்க்கும்போது, தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா என்ற சந்தேகம் எழுகிறது. இவற்றுக்கெல்லாம் மக்கள் பாடம் புகட்டுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.