சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களை, வீடு தேடிச் சென்று நலம் விசாரிப்பது தமிழ் பண்பாடு. அந்த வகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய முதல்வரை, வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தேன். என் மனைவி, தாய் இறந்தபோது, என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியவர் முதல்வர். சந்திப்பில், எவ்வித அரசியலும் இல்லை. ஆனால், இந்த சந்திப்பை வைத்து, என்னை தி.மு.க.,வின் 'பி டீம்' என்றும், நான் தி.மு.க.,வில் இணையப் போவதாகவும், பல்வேறு வதந்திகளை, சமூக வலைதளங்கள் வாயிலாக சிலர் பரப்புகின்றனர். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது தான், எங்களின் நோக்கம். நிதி தொடர்பாக, மத்திய அரசை வலியுறுத்தி, இப்போதுதான் நான் அறிக்கை வெளியிடுவதுபோல் விமர்சனங்கள் எழுகின்றன. ஏற்கனவே, கடந்த ஆண்டு ஆக., 29ல் அறிக்கை வெளியிட்டேன். ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை ஆகியோரை விமர்சித்த ஹிந்து முன்னணிக்கு கண்டனம் தெரிவித்து, கடந்த ஜூன் 25ல் அறிக்கை வெளியிட்டேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.