4 டிகிரி வரை வெயில் எகிறும்;150 ஆண்டில் 5வது முறை இது!
சென்னை: 'வறண்ட வானிலை காரணமாக, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அந்த மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் உருவாகி, மேற்கு வங்கத்தில் கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி செல்கிறது. இது, ராஜஸ்தான் வரை சென்று படிப்படியாக வலுவிழக்கும். இதன் காரணமாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. ஆனால், தென் மாநிலங்களில் வறண்ட வானிலையே காணப்படுகிறது. அத்துடன், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகமும் மாறியுள்ளது. அதனால், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். வறண்ட வானிலை காரணமாக, ஒரு சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும். வெப்பநிலை அதிகரிப்பால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய புள்ளி விபரங்கள் அடிப்படையில், 150 ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக தற்போது அதிக வெப்பம் பதிவாகி, வெயில் வறுத்தெடுப்பதாகக் கூறப்படுகிறது.
மின் நுகர்வும் அதிகரிப்பு
தமிழக மின் நுகர்வு தினமும் சராசரியாக 30 கோடி யூனிட்களாக உள்ளது. இது, கோடை வெயிலால் ஏப்ரல், மே மாதங்களில் அதிகரிக்கும். அதன்படி, இந்தாண்டு ஏப்., 30ல் எப்போதும் இல்லாத வகையில், 45.43 கோடி யூனிட்களாக மின் நுகர்வு அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.அரசு, தனியார் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அந்த நாளில் மின் நுகர்வு வழக்கத்தை விட குறையும். ஆனால், காலநிலை மாற்றத்தால் இம்மாதம் துவங்கியதில் இருந்து வெயில், கோடைக்காலத்தை போல சுட்டெரித்து வருகிறது.அதனால், வீடுகளில், 'ஏசி' சாதன பயன்பாடு பகலிலும் அதிகரித்துள்ளதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை மின் நுகர்வு 36.94 கோடி யூனிட்களாக இருந்தது. இதுவே, இம்மாதம் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 35 கோடி யூனிட்களாகவும்; 7ல், 36 கோடி யூனிட்களாகவும் இருந்தது.காலநிலை மாற்றத்தால், இம்மாதம் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வெயில் காரணமாக மின் நுகர்வு அதிகரித்து வருவதால், அதை பூர்த்தி செய்யும் பணியில் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.