உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி 6 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி 6 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்

சென்னை: நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளை பாதிக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசி திட்டம், ஆறு மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யய பட்டுள்ளது.சென்னை, செனாய் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஜப்பானிய தடுப்பூசி திட்டத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். பின், அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை, இந்நோய் அதிகம் பாதிக்கும். இந்த வகை மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசி திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தற்போது, சென்னையில் இரண்டு மண்டலங்களில் மட்டும் தடுப்பூசி திட்டம் இருந்த நிலையில், மற்ற 13 மண்டலங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அத்துடன், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம், வேலுார் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பானிய மூளைக்காய்ச்சல், சில வகையான, 'கியூலெக்ஸ்' கொசுக்களால் பரவும் நோய். நரம்பு மண்டலத்தை பாதித்து, கடுமையான சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால், இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால், அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்நோய் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் கூட, நரம்பியல் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளை கண்டறிந்து, தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. 1 முதல் 15 வயது வரையிலான, 27.63 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

எங்கெங்கு எப்போது?

* 5 முதல் 15 வயதுடைய மாணவர்களுக்கு, பள்ளிகளில் செப்., 12 வரை திங்கள், வியாழன், வெள்ளிக் கிழமைகளில் தடுப்பூசி போடப்படும். விடுப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரம் நீட்டிக்கப்படும். * 1 முதல், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, அனைத்து அங்கன்வாடி மையங்களில், செப்., 13 முதல் அக்., 12 வரை திங்கள், வியாழன், வெள்ளிக் கிழமைகளில் போடப்படும். * 1 முதல் 15 வயதான அனைத்து குழந்தைகளுக்கும், அக்., 13 முதல் நவ., 12ம் தேதி வரை தடுப்பூசி போடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை