ஒரே நாளில் 5 இடங்களில் நகை, பணம் திருட்டு; கோவையில் முகமூடி கொள்ளையன் கைவரிசை
கோவை : கோவை அருகே கோவைப்புதுார் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல்ராஜ், 75. கடந்த, 9ம் தேதி இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு சாமுவேல்ராஜ் மனைவி எழுந்து பார்த்த போது, படுக்கை அறை கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்திருந்தது. பீரோவில் இருந்த, 10 சவரன் நகை, பணம் மாயமாகியிருந்தது.சாமுவேல் ராஜ் எழுந்து, 'சிசி டிவி' காட்சிகளை பார்த்தபோது, முகமூடி அணிந்த ஒருவர் வீட்டை சுற்றி வந்தது தெரிந்தது. சாமுவேல் ராஜ் குனியமுத்துார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அதே பகுதியில், ஐந்து வீடுகளில் பணம், நகை திருட்டு நடந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் தராததால், வழக்குப்பதிவு செய்யவில்லை.இதேபோல், பெரிய கடை வீதி, வைசியாள் வீதியில் உள்ள ஒரு நகைக்கடை ஷட்டரை உடைத்து, நகைகளை திருட முயற்சித்துள்ளனர். கடையை திறக்கச் சென்றபோது, ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது. கடை உரிமையாளர் பட்டுராஜன் எபிநேசர் அளித்த புகார் அடிப்படையில், போலீசார் குனியமுத்தூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றியவரை விசாரித்தனர். சென்னையை சேர்ந்த அந்நபர், கணபதி பகுதியில் தங்கி, பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டி வந்ததும், அடையாளம் தெரியாமலிருக்க முகமூடி அணிவதும் தெரிந்தது. அவரிடமிருந்து இரு முகமூடிகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.