உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 21 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடகா வழங்கவில்லை: பிரச்னை ஏற்படும் அபாயம்

21 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடகா வழங்கவில்லை: பிரச்னை ஏற்படும் அபாயம்

காவிரியில் இடைக்கால தீர்ப்பின்படி இந்த சீசனுக்கு கர்நாடகா வழங்க வேண்டிய தண்ணீரில் 21.48 டி.எம்.சி., பற்றாக்குறை உள்ளது. இதனால், வரும் ஜனவரி மாதம் வரை மட்டுமே, மேட்டூரில் இருந்து தண்ணீர் வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி, ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில், 135 டி.எம்.சி., தண்ணீரை காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டும். ஆனால், கடந்த ஜூலை மாதமே, இந்த அளவில் 35 டி.எம்.சி., பற்றாக்குறை இருந்தது.இது பற்றி, ஜூலை கடைசி வாரத்தில், மத்திய நீர்வளத் துறை செயலர், கர்நாடக அரசின் தலைமைச் செயலர், தமிழக அரசின் பொதுப்பணித் துறை செயலர் கலந்து கொண்ட கூட்டத்தில், தமிழக அரசு வலியுறுத்தியது. அப்போது, கர்நாடகா தரப்பில், ஆகஸ்ட் மாதம் தண்ணீர் தருவதாக தெரிவிக்கப்பட்டது.

அதன் பின், தண்ணீர் திறந்து விட்ட போதிலும், இடைக்கால தீர்ப்பில் குறிப்பிட்ட அளவில் தண்ணீர் வரவில்லை. பில்லிகுண்டுவில் கிடைக்கும் தண்ணீரை வைத்தே, கர்நாடகா, தமிழகத்துக்கு தரும் தண்ணீர் அளவு கணக்கிடப்படுகிறது. இதன்படி, இதுவரை 111 டி.எம்.சி., தண்ணீரே தமிழகத்துக்கு கிடைத்துள்ளது.இதனால், தமிழகத்துக்கு கர்நாடகா, செப்டம்பர் வரையிலான காலத்துக்கு 21.48 டி.எம்.சி., தண்ணீர் இன்னும் தர வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில், மழைநீர், வெள்ள நீர் போன்றவற்றால், பாசனம் பாதிக்கப்படவில்லை.

எனினும், மேட்டூர் அணையில் தற்போது, 52 டி.எம்.சி., தண்ணீர் தான் உள்ளது. அதாவது, 90 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. நாள் ஒன்றுக்கு ஒன்றரை டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்படி, வரும் டிசம்பர் கடைசி வரை தான் தண்ணீர் திறந்து விட முடியும். குறைந்த அளவு மழை பெய்தாலும், அதை வைத்து, ஜனவரி 28ம் தேதி வரை தான் தண்ணீர் திறந்து விட முடியும்.

வரும் பருவமழை காலத்தில் அதிகளவு மழை பெய்தால், தண்ணீர் பிரச்னை இருக்காது. மேலும், தண்ணீர் திறந்து விட வேண்டிய அவசியமும் ஏற்படாது. அவ்வாறு பெய்யாமல், மழை பொய்த்து போனால், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தண்ணீர் இருக்காது. எனவே, பற்றாக்குறை நீரை வழங்க வேண்டுமென, கர்நாடகா அரசை தமிழகம் வலியுறுத்தி வருகிறது.

-பா.பாஸ்கர்பாபு-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்