| ADDED : டிச 03, 2025 06:05 AM
'கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற முயற்சிக்கின்றனர்' என விமர்சித்துள்ள மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., வெங்கடேசனுக்கு, 'கார்த்திகை தீபம், உங்கள் ஹிந்து விரோத அரசியலை நிச்சயம் பொசுக்கும்' என, தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவர் சூர்யா பதிலடி கொடுத்துள்ளார். 'கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற, மதவெறி சக்திகள் எல்லா வகையிலும் முயல்கின்றனர். மதவெறி அரசியலை எந்த நாற்காலியில் அமர்ந்து அமல்படுத்தினாலும், அதை முறியடிக்கும் வலிமை மதசார்பற்ற சக்திகளுக்கு உண்டு. 'ஹிந்துத்துவா மதவெறி அரசியலை எதிர்கொள்ள குன்றென நிமிர்ந்து நிற்கிறோம்' என, வெங்கடேசன் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்து, சூர்யா வெளியிட்ட அறிக்கை: கார்த்திகை தீபம் என்பது மங்களத்தின் அடையாளம். அதைப்போய் கலவர தீபம் என அழைக்கலாமா? உயர் நீதிமன்றமே அனுமதித்த பின், தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீட்டில், விளக்கு ஏற்றுவதை கலவரம் எனக்கூறுவது, பக்தர்களின் நெஞ்சில் ஈட்டி பாய்வது போல உள்ளது. ஏற்கனவே, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தையும் இப்படித்தான் உங்கள் கட்சியினர் கொச்சைப்படுத்தி பேசினர். கேரளாவில், அய்யப்ப பக்தர்கள் மீது தடியடி நடத்தி விரட்டி விட்ட மார்க்சிஸ்ட்கள், அங்கே ஹிந்துக்களை ஒடுக்குவதும், இங்கே வந்து மதசார்பின்மை வேடம் போடுவதும் இரட்டை நிலைப்பாடு. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது பக்தர்களின் உரிமை என உயர் நீதிமன்றம் சொன்ன பின், அதை எதிர்ப்பது சட்டத்தை அவமதிக்கும் செயல். பிற மத பண்டிகைகளுக்கு முதல் ஆளாக ஓடிச்சென்று வாழ்த்து தெரிவிக்கும் உங்கள் நாக்கு, ஹிந்து பண்டிகையை கலவரம் என முத்திரை குத்துவது ஏன்? முருகபெருமானின் சன்னிதியில் எரியும் அந்த கார்த்திகை தீபம், உங்கள் ஹிந்து விரோத அரசியலை பொசுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது நிருபர் -