கருங்கல் ஜல்லி, எம் - சாண்ட் விலை மீண்டும் 40 சதவீதம் உயர்கிறது
சென்னை:'கட்டுமான பணிக்கான கருங்கல் ஜல்லி, 'எம் -சாண்ட்' போன்றவற்றின் விலை மீண்டும், 40 சதவீதம் வரை உயர்த்தப்படும்' என, குவாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதை தடுத்து நிறுத்தக்கோரி, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கம், தமிழக அரசிடம் முறையிட்டு உள்ளது. தமிழகத்தில், 3,000க்கும் மேற்பட்ட கருங்கல் குவாரிகள், 4,800 கல் உடைக்கும் கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலான குவாரிகள், கிரஷர்கள் தனியார் நிலங்களில் செயல்படுகின்றன.ஜல்லி, எம் - சாண்ட் தயாரிப்புக்காக கருங்கல் உள்ளிட்ட பொருட்களை வெட்டி எடுக்கும் போது, அதற்கான உரிமத்தொகையை குவாரி உரிமையாளர்கள் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு இந்த கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை காரணமாக வைத்து, கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில், எம் - சாண்ட், கருங்கல் ஜல்லி விலையை குவாரி உரிமையாளர்கள் உயர்த்தினர். குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் அறிவிக்கப்பட்ட இந்த உயர்வு, இந்த ஆண்டு பிப்., 1ல் அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, கருங்கல் ஜல்லி, 'வெட் மிக்ஸ்' ஆகியவற்றின் விலை ஒரு யூனிட் அதாவது, 100 கன அடி, 2,000த்தில் இருந்து, 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதேபோன்று, எம் -சாண்ட் விலை யூனிட், 3,000த்தில் இருந்து, 4,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அத்துடன் போக்குவரத்து செலவுக்காக, லோடுக்கு கூடுதலாக, 1,000 ரூபாய் விலையில் சேர்க்கப்பட்டது. அப்போதே இந்த விலை உயர்வுக்கு கட்டுமான துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, மீண்டும் கருங்கல் ஜல்லி, எம் -சாண்ட் விலையை உயர்த்தப் போவதாக, குவாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இன்று முதல் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.இதுகுறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தமிழக தலைவர் பா.பழனிவேல் கூறியதாவது:அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் அனைத்தும், கருங்கல் ஜல்லிகள், எம் - சாண்ட் போன்றவற்றை நம்பி தான் செய்யப்படுகின்றன. அவற்றின் விலைக்கு எவ்வித வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. இதனால், குவாரி உரிமையாளர்கள் சொல்வது தான் விலை என்ற நிலை உள்ளது. இதை பயன்படுத்தி, கருங்கல் ஜல்லி, எம் - சாண்ட் விலையை, 30 முதல், 40 சதவீதம் வரை உயர்த்துவதாக, சில மாவட்ட கிரஷர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.இந்த விலை உயர்வு, நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு தான் விலை உயர்த்தப்பட்டது என்பதால், தற்போதைய விலை உயர்வை அனுமதித்தால், கட்டுமான செலவு வெகுவாக அதிகரிக்கும். அரசு மற்றும் கட்டுமான திட்டப்பணிகள் பாதியில் முடங்கும். ஏற்கனவே பணம் செலுத்திய மக்கள், திட்டமிட்டபடி வீடு பெற முடியாத நிலை ஏற்படும். எனவே, அரசு தலையிட்டு, இந்த விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும் என, தொழில் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.கட்டுமான பணிகள் முடங்கும்எவ்வித அடிப்படை காரணமும் இன்றி, இப்பொருட்கள் விலை, ஆறு மாதத்துக்கு ஒரு முறை உயர்த்தப்படுவதை ஏற்க முடியாது. இந்த விலை உயர்வால், மக்களின் வீடு கட்டும் திட்டம் சிதையும். கட்டுமான பணிகள் மொத்தமாக முடங்கும். கட்டுமான பொருட்களை, அத்தியாவசிய பட்டியலில் சேர்த்து, விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினுக்கு, எங்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அனுப்பி இருக்கிறோம்.- செல்லராஜாமணி, தலைவர், தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு.