கரூர் துயரம்; அரசியல் கட்சியினர் அனைவருக்கும் பாடம்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
-நமது நிருபர்-கரூர் விஜய் பிரசார பொதுக்கூட்டத்தில் நேற்றிரவு நிகழ்ந்த துயரம், பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூட்டும் அரசியல் கட்சியினர் அனைவருக்கும் ஒரு பாடம். தமிழகம் போன்ற கல்வியறிவு மிகுந்த ஒரு மாநிலத்தில் இப்படி ஒரு துயரம் நடந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=atzwb9kl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கான காரணங்களை, கூட்டம் நடத்துவோர், அனுமதி வழங்குவோர், கட்சிகளின் தொண்டர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். 'பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடினால் தான் நமக்குப் பெருமை' என்று நினைக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு, கூட்டத்தை பாதுகாப்புடன் வழிநடத்த தெரிவதில்லை. அனுமதி அளிப்போருக்கும், கூடும் கூட்டத்தை கையாளும் ஆற்றல் இருப்பதில்லை.கட்டடத்தில் ஏறுவது, மரத்தில் ஏறி நிற்பது, மின் கம்பம், டிரான்ஸ்பார்மரில் ஏறுவது என்று தலைகால் புரியாமல் திரியும் இளம் தலைமுறையினரை வழி நடத்துவது எவராலும் இயலாத காரியம். அத்தகைய கூட்டத்தை கட்டுப்படுத்த, அரசியல் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகள் மட்டும் போதுமானவை அல்ல. எல்லாம் நல்லபடியாக நடந்தால் தான் மட்டும் பெருமைப்பட்டுக் கொள்வது, அசம்பாவிதம் நடந்தால் அடுத்தவர் மீது பழியை போடுவது என்பதே இன்றைய அரசியல்.இதைப்புரிந்து கொள்ளாமல் ஆர்வக்கோளாறில் அரசியல் கட்சி கூட்டங்களுக்கு சென்று, நெரிசலில் முண்டியடிப்போர் தான் இப்படி உயிரிழக்கின்றனர். நிவாரண நிதியும், இரங்கல் அறிக்கைகளும், இழந்த உயிரை திரும்பத் தராது என்பதை தங்கள் தலைவர்களுக்காக கூட்ட நெரிசல்களில் முண்டியடிக்கும் தொண்டர்கள் கூட்டம் உணர்ந்து கொள்ள வேண்டும். இனியாவது, அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், கண்டிப்பான ஒழுங்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் கட்சி கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட வேண்டும். இத்தனை பேர் உயிரிழப்புக்கு பிறகும், இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணாவிட்டால், தமிழகம் பெற்ற கல்வியறிவுக்கு பலன் எதுவுமில்லை.