கதண்டு வண்டு கடித்ததில் தம்பதி பலி; தென்காசியில் சோகம்
தென்காசி: தென்காசி அருகே கதண்டு வண்டு கடித்ததில் முதிய தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; தென்காசி மாவட்டம், சீவநல்லூர் என்ற கிராமத்தில் கோவில் ஒன்றில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் கலந்து கொள்ள ஊர்மக்கள் ஏராளமானோர் குவிந்து இருந்தனர். அப்போது அங்கே இருந்த தென்னை மரத்தில் இருந்து பறந்து வந்த கதண்டு வண்டுகள் ஊர் மக்களை கடிக்க ஆரம்பித்தன. வலி தாங்க முடியாமல் ஏராளமானோர் கதறியபடியே அங்கும், இங்கும் ஓடினர்.வண்டு கடித்ததில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் முதிய தம்பதி லட்சுமணன், மனைவி மகராசி ஆகியோரை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக நெரிவித்தனர். எஞ்சியர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வண்டின் கூட்டு கலைந்ததே காரணம் என்று தெரிய வந்துள்ளது.