உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உத்திரகோசமங்கையில் அழிந்து வரும் மரகத ஓவியங்களை பாதுகாக்க வேண்டும் கவின் கலை கல்லுாரி மாணவர்கள் வேண்டுகோள்

உத்திரகோசமங்கையில் அழிந்து வரும் மரகத ஓவியங்களை பாதுகாக்க வேண்டும் கவின் கலை கல்லுாரி மாணவர்கள் வேண்டுகோள்

சென்னை: 'புகழ்பெற்ற, ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் உள்ள 17ம் நுாற்றாண்டு விஜயரகுநாத சேதுபதி காலத்து மரகத ஓவியங்கள் அழியும் தருவாயில் உள்ளன. அவற்றை பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும்' என, வரைகலை பயிற்சிக்கு சென்ற சென்னை அரசு கவின் கலை கல்லுாரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பேராசிரியர்கள் கு.கவிமணி, பாண்டி ஆகியோர் தலைமையில், சென்னை அரசு கவின் கலைக் கல்லுாரி மாணவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவில், திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாத பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில், மூன்று நாள் வரைகலை பயிற்சிக்கு சென்றனர். பயிற்சி கோவிலில் உள்ள சிற்பங்களின் நுணுக்கங்கள், அளவீடுகள், வடிவமைப்பு முறைகள், கட்டடக்கலை அளவீடுகளை கண்டறிந்து, ஆய்வு செய்து தகவல் சேகரித்தனர். அதேபோல், நாகக்கன்னி சிற்பம், அழகிய மரக்கதவுகள், சிற்ப துாண்கள், கல் கருட பகவான், மரச்சிற்பம் உள்ளிட்ட சிற்பங்களை வண்ண ஓவியங்களாகவும், கோட்டோவியங்களாகவும் வரைந்து, வரைகலை பயிற்சி மேற்கொண்டனர். ஆய்வு குறித்து, அவர்கள் கூறியதாவது: உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவிலில், சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக, இரண்டு ஆண்டுகளாக கோவில் திருப்பணிகள் நடந்தன. ஆனால், அக்கோவிலில் உள்ள சிறப்பு வாய்ந்த மரகத ஓவியங்கள் செப்பனிடப்படவில்லை. இக்கோவிலில் உள்ள மூலவர் நடராஜர், பச்சை மரகதக் கல்லில் எழுந்தருளியுள்ளார். இக்கோவில் உட்புறச் சுவர்கள் முழுதும் வண்ண சுவர் ஓவியங்கள் இருந்துள்ளன. சமூகத்தின் சொத்து ஆனால், அவை பராமரிப்பின்றி அழிந்து, தற்போது மேல்கூரையில் மட்டும் எஞ்சியுள்ளன. இவை, 17ம் நுாற்றாண்டு விஜய ரகுநாத சேதுபதி காலத்து மரகத ஓவியங்களாகும். எஞ்சியுள்ள ஓவியங்களும் வண்ண தீட்டலில் தனிச் சிறப்பு பெற்றவை. இந்த சுவர் ஓவியங்களில் பயன்படுத்தியுள்ள பச்சை வண்ணம், மரகத தன்மையை வெளிப் படுத்துகிறது. தமிழகத்தில் வேறு எந்த சுவர் ஓவியங்களிலும், இந்த பச்சை வண்ணம் காணப்படவில்லை. எனவே, வண்ணம் மற்றும் ஓவிய நுட்ப வகைகளில், மரகத நடராஜர் கோவில் சுவர் ஓவியங்கள், தமிழகத்தின் அறிவியல், பண்பாடு அறிவு சமூகத்தின் சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டும். ஓவியங்கள் இடம்பெற்ற சுவர்களில், மின்சார வேலைப்பாடுகள் நடந்துள்ளன; அவை களையப்பட வேண்டும். மேலும், இந்த ஓவியங்களை புத்தகங்களாக ஆவணப்படுத்த வேண்டும். ஓவியங்களை வீடியோ பதிவு செய்து, அதன் சிறப்புகள் குறித்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விளக்க வேண்டும். அதேபோல், ராமனின் தந்தை தசரத மஹாராஜா பூஜித்ததாகக் கூறப்படும், திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாத பெருமாள் கோவிலில் உள்ள துவார பாலகர்கள் சிற்பங்கள், வில், அம்புடன் கூடிய சிறப்பு வாய்ந்ததாக உள்ளன. சயன ராமன் இவை, ராமனுக்கு வேடர்கள் பாதுகாப்பு அளித்ததாக அமைந்துள்ளன. இதுவரை யாரும் இதை குறிப்பிடவில்லை. இந்த ஆய்வின் வாயிலாக, முதன்முறையாக நாங்கள் உறுதி செய்கிறோம். வரலாற்றுடன் தொடர்புடைய கோவிலாக கருதப்படும் இங்கு, சிறப்பு வாய்ந்த சயன ராமன் சன்னிதி உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, மரபு வழியில், கட்டுமானத்தை புனரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mecca Shivan
ஆக 29, 2025 07:41

கோவிலையே அழிப்பவர்களுக்கு கோவில் ஓவியம் ஒரு விஷயமே இல்லை ..இந்த உத்தரகோச மங்கை கோவிலை சில தனியார்கள் துறையுடன் சேர்ந்து கொள்ளடிப்பதை இன்னும் நிறுத்தவில்லை ..கோவிலின் சொத்துக்கள் அபகரிப்பட்டுள்ளது .. கடை வாடகை, நில குத்தகை தொகை என்று எதுவுமே சரியாக வருவதில்லை.. ஹிந்துக்கள் அல்லாதோருக்கு உள்வாடகை மேல் குத்தகை கொடுத்து சம்பாதிக்கும் கும்பல். வக்ப் போர்டின் திட்டத்தில் பெருமபாலன நிலங்கள். கோவிலுள்ள பல பொக்கிஷங்கள் காணவில்லை என்று பொதுமக்களின் குற்றச்சாட்டுகளும் மிக கேவலமான பராமரிப்பும் .. சிவன் சொத்து குல நாசம் என்பது பக்தர்களுக்கு மட்டுமல்ல அது நாத்தீகர்களுக்கும் பொருந்தும் ஹிந்துக்கள் அல்லாத அல்லது ஹிந்துக்கள் என்றபோர்வையில் ஒளிகொண்டுள்ள நபர்களுக்கும் பொருந்தும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை