உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுநீரக மாற்று ஆப்பரேஷன் முறைகேடு; 2 தனியார் மருத்துவமனை உரிமம் ரத்தாகிறது

சிறுநீரக மாற்று ஆப்பரேஷன் முறைகேடு; 2 தனியார் மருத்துவமனை உரிமம் ரத்தாகிறது

சென்னை: 'சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை முறைகேடாக நடத்திய, இரண்டு தனியார் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் வறுமை காரணமாக பலர் தங்களின் சிறுநீரகத்தை விற்றது, இரண்டு தனியார் மருத்துவமனைகளில் முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது தொடர்பான தகவல் சமீபத்தில் வெளியானது.

இது, தமிழகம் முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது குறித்து விசாரித்து, விரிவான அறிக்கை அளிக்க, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையில், தமிழக அரசு குழுவை நியமித்தது. இக்குழு கடந்த மாதம் 22ம் தேதி விசாரணையை துவக்கியது. திருச்செங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், சிறுநீரக கொடையாளிகள் தொடர்பான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், 'மனித உறுப்பு மாற்று சட்டம் 1994'க்கு முரணாக, தனியார் மருத்துவமனைகள் தவறான முறையில் சான்றுகள் சமர்ப்பித்து, நெருங்கிய உறவினர்கள் அல்லாத கொடையாளர்களிடம் பணத்திற்கு உறுப்புகளை பெற்றது தெரிய வந்தது. விசாரணையை முடித்து, அறிக்கையை அரசிடம் வினீத் அளித்துள்ளார். அதை அரசு பரிசீலித்து, அதில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகள் அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கை: * திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை போன்றவற்றில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் வழியே நடவடிக்கை எடுக்கப்படும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள, இரு தரகர்களான ஆனந்தன், ஸ்டான்லி மோகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் * மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உரிமம் பெற்ற மருத்துவமனைகளின் ஆவணங்கள் அவ்வப்போது ஆய்வு செய்யப்படும். முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் * மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்க, தற்போது மாவட்ட அளவில் மட்டுமே நான்கு அங்கீகார குழுக்கள் உள்ளன. இதை சீரமைத்து, மாவட்ட குழுக்களின் பணிகளை மேற்பார்வை செய்யும் அதிகாரம் வழங்கி, புதிதாக மாநில அளவில் குழு அமைக்கவும், ஏற்கனவே மாவட்ட அளவில் உள்ள குழுக்களை மறு சீரமைப்பு செய்யவும் உரிய ஆணைகள் அரசால் வெளியிடப்படும்* மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளவர்களுக்கும், கொடையாளிகளுக்கும், தகுந்த மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் வழங்க, நிலையான இயக்க நடைமுறைகளை உருவாக்கி செயல்படுத்த, மருத்துவ கல்வி இயக்குநருக்கு அறிவுறுத்தப்படும் * உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் விழிப்பணர்வு ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகங்களுக்கு உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் * உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின் செயலாக்கத்தை செம்மைப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகள் குறித்து, உரிய ஆணைகள் அரசால் வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி