கோடநாடு கொலை - கொள்ளை வழக்கு: இ.பி.எஸ்.,சிடமும் விசாரிக்க முடிவு
கோவை : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவில், 2017ம் ஆண்டு ஏப்., மாதம் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இவ்வழக்கில் கைதானவர்கள் மற்றும் எதிர்தரப்பினர், தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறி, சிலரிடம் விசாரிக்க வேண்டும் என, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன் உட்பட, 18 பேரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.தற்போது வரை சசிகலா உள்ளிட்ட 15 பேரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தியுள்ள நிலையில், கோடநாடு எஸ்டேட் பங்களாவில் முன்னாள் பங்குதாரர் மற்றும் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனான சுதாகரனை, விசாரணைக்கு இன்று ஆஜராக சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, கோடநாடு கொலை சம்பவம் நடந்தபோது முதல்வராக இருந்த பழனிசாமி மற்றும் இளவரசியிடம் விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டுள்ளனர்.சி.பி.சி.ஐ.டி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது வரை 600க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்துள்ளோம். எதிர்தரப்பினர் மனுவின்படி, 18 பேரிடம் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையிலும் விசாரித்து வருகிறோம். 18 பேரில், முன்னாள் முதல்வர் பழனிசாமி மற்றும் இளவரசி ஆகியோரிடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளது. விரைவில் அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்படும். கோடநாடு வழக்கில் முக்கிய ஆதாரங்களான, போலீஸ் அதிகாரி கனகராஜ் மற்றும் உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜ் மற்றும் சியான் ஆகியோரின் மொபைல் போன்கள் மாயமாகியுள்ளன. அவற்றை கண்டுபிடித்தால், மேலும் சில தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. போலீஸ் அதிகாரி கனகராஜ் பயன்படுத்திய, அரசுக்கு சொந்தமான போன் எங்கே போனது என்பது புதிராக உள்ளது. அந்த மொபைல் போன் மற்றும் அதில் உள்ள தகவல்களை கைப்பற்ற, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.