உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு மீது நில அபகரிப்பு புகார் : புதுகை கலெக்டரிடம் விவசாயி மனு

தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு மீது நில அபகரிப்பு புகார் : புதுகை கலெக்டரிடம் விவசாயி மனு

புதுக்கோட்டை : விவசாயி ஒருவருக்கு சொந்தமான 13.5 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயல்வதாக, தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு மீது, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா, கருப்பட்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேலாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்லதுரை, 42. இவர் நேற்று, கலெக்டர் மகேஸ்வரியிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

வேலாடிப்பட்டி கிராமத்தில் குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்ததன் மூலம், எனக்கு 13.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் முந்திரி சாகுபடி செய்து, அதன் பலனை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்தேன். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு, 7 கோடி ரூபாய்.

என் நிலத்தைச் சுற்றி கிட்டத்தட்ட 90 ஏக்கர் நிலத்தை, தன் ஆதரவாளர்கள் மூலம் விலைக்கு வாங்கியுள்ள, தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு, அதன் அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தையும் வளைத்து போட்டுள்ளார்.

இதற்கு வருவாய்த்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள் உடந்தையாக இருந்தனர். இதையடுத்து, என் இடத்தை வாங்க, ஆதரவாளர்கள் மூலம் டி.ஆர்.பாலு முயற்சி மேற்கொண்டார். குடும்பச் சொத்து என்பதால், நிலத்தை பிறருக்கு விற்பனை செய்ய நான் விரும்பவில்லை. இதையடுத்து, என்னை அவரது ஆதரவாளர்கள் மிரட்டினர்.

இதன் பின்னரும் நான் மசியாததால், இரவோடு இரவாக என் நிலத்தில் அத்துமீறி நுழைந்த டி.ஆர்.பாலு ஆதரவாளர்கள், அதில் சாகுபடி செய்யப்பட்டிருந்த முந்திரி மரங்களை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் வேருடன் சாய்த்துவிட்டு, நிலத்தை சமன் செய்தனர்; போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டனர்.

தகவலறிந்த நான் இதுகுறித்து கந்தர்வக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன். புகாரை பெற்ற போலீசார் அப்போது, பாலு மத்திய அமைச்சர் என்பதால், டி.ஆர்.பாலு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இருந்தும் அந்த நிலத்தில் முந்திரிக்கு பதில், மீண்டும் தைல மரங்களை சாகுபடி செய்து பராமரித்து வருகிறேன்.

மோசடி ஏதும் நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில், வில்லங்கச் சான்றிதழ் வேண்டி கறம்பக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். விண்ணப்பத்துடன் நிலத்துக்குண்டான உரிய ஆவணங்களின் நகலையும் இணைத்திருந்தேன். மாதங்கள் பல கடந்தும் எனக்கு வில்லங்க சான்றிதழ் வழங்கவில்லை. இதற்கான காரணத்தை தெரிவிக்கவும் சார் பதிவாளர் அலுவலகத்தினர் மறுத்துவிட்டனர்.

தி.மு.க., ஆட்சி என்பதால் அதிகார, ஆள், பணபலம் படைத்த, டி.ஆர்.பாலு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த நான், இதுகுறித்து அப்போது உயர் அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்யவில்லை.

தற்போது, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி என்பதால், நியாயம் கிடைக்கும் என்பதை உணர்ந்து மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு தந்துள்ளேன். தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு மற்றும் அவரது ஆதரவாளர்களின் அபகரிப்பில் இருந்து என் நிலத்தை பாதுகாக்கும் விதமாக, சார் பதிவாளர் அலுவலகம் மூலம் வில்லங்கச் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை