மேலும் செய்திகள்
தி.மலையில் தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருப்பு
1 hour(s) ago
திருச்சி: 'இடத்தை அபகரித்து, பணம் தராமல் ஏமாற்றிய, திருச்சி, 'சாரதாஸ்' ஜவுளிக் கடை உரிமையாளர்கள் மணவாளன், ரோஷன், சண்முகம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, 80 வயது மூதாட்டி, திருச்சி போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் அளித்தார். திருச்சி, மலைக்கோட்டை, வடக்குவீதியைச் சேர்ந்த பழனி மனைவி சின்னப்பிள்ளை, 80. அவருக்கு ஐந்து மகன், மூன்று மகள் உள்ளனர். மகன் இரண்டு பேர் இறந்து விட்டனர். மற்ற அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். கணவனை இழந்த கடைசி மகளுடன், சின்னப்பிள்ளை வசிக்கிறார். மலைக்கோட்டை பகுதியில், அவர் குடியிருந்த வீட்டை, 25 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய பிரபல, சாரதாஸ் ஜவுளிக்கடை நிறுவனம், ஐந்து லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு, மீதி ரூபாயை தராமல் மோசடி செய்து விட்டதாக, சாரதாஸ் ஜவுளிக்கடை உரிமையாளர் மணவாளன், அவரது மகன் ரோஷன், சண்முகம் ஆகியோர் மீது, திருச்சி போலீஸ் துணை கமிஷனர், சத்தியப்ரியாவிடம், சின்னப்பிள்ளை, நேற்று முன்தினம் புகார் அளித்தார்.புகாரில் கூறியிருப்பதாவது: தாயுமானவர் கோவில் நிர்வாகத்துக்குச் சொந்தமான, 5,000 சதுர அடி இடத்தை, அடிமனை வாடகைக்கு, 1928ம் ஆண்டு, என் தந்தை தண்டபாணிக்கு, கோவில் நிர்வாகம் வழங்கியது; மாதந்தோறும் வாடகை செலுத்தி வந்தோம். என் கணவர், அவரது சகோதரர் இறந்த பின், அந்த இடத்தில், என் கடைசி மகளுடன் வசிக்கிறேன். என் வீட்டருகே குடியிருந்த சாரதாஸ் உரிமையாளர் மகன், சண்முகம், தில்லைநகருக்கு குடிபோனார். 2007ல், என் வீட்டுக்கு வந்த அவர், 'ஏன் கஷ்டப்படுறீங்க; இடத்தை கைமாற்றிவிட்டு நல்ல வாழ்க்கை வாழலாம். சாரதாஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் வாகனங்கள் நிறுத்த, இடம் கேட்கின்றனர்; 25 லட்சம் ரூபாய் வாங்கித் தருகிறேன்' என்றார். குடும்ப சூழல் கருதி, நானும் வீட்டைக் கொடுக்க சம்மதித்தேன். முதலில், ஐந்து லட்சம் ரூபாய் வழங்கினர். பணத்தை வாங்கிக் கொடுத்த சண்முகம், 'இடத்தை சாரதாஸ் நிறுவனப் பொறுப்பில் விட வேண்டும்; மீதி, 20 லட்சம் ரூபாயை, மூன்று மாதங்களில் வாங்கிக் கொடுக்கிறேன்' என்று கூறினார். நம்பிக்கையின் அடிப்படையில் இடத்தை விட்டு வெளியேறினேன்; ஆனால், இதுவரை பணம் தரவில்லை. கேட்டால், 'அடித்து கொலை செய்து, கட்டடத்தில் வைத்து பூசி விடுவோம்' என்று, என்னை மிரட்டுகின்றனர். இடத்தை அபகரித்து, 20 லட்சம் ரூபாயும் தராமல் மோசடி செய்து விட்டனர். சாரதாஸ் உரிமையாளர்கள் மணவாளன், அவரது மகன் ரோஷன், இடத்தை வாங்கிக் கொடுத்த சண்முகம் ஆகிய மூவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.சின்னப்பிள்ளையின் வழக்கறிஞர் பிரகாஷ் கூறுகையில், ''சாரதாஸ் பெரிய நிறுவனம் என்பதால், போலீசார் வழக்கு பதிவு செய்ய தயங்குகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்,'' என்றார். சாரதாஸ் ஜவுளிக்கடை உரிமையாளர்களை தொடர்பு கொள்ள போன் செய்த போது, ''ரோஷன் சார் வெளிநாடு சென்றுள்ளார்; ஒரு வாரம் கழித்து வந்து பாருங்கள்,'' என்று கூறி கடை ஊழியர் இணைப்பைத் துண்டித்தார். மீண்டும் போன் செய்த போது, பேசிய கேஷியர் ரெங்கராஜ், ''மணவாளன் சார், 'ரவுண்ட்ஸ்' போயிருக்காரு... உதவி செய்யப் போய், உபத்திரவம் வந்து நிற்கிறது. காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால், கூட்டமாக இருக்கிறது... 30 நிமிடங்கள் கழித்து பேசுங்க,'' எனக் கூறி இணைப்பைத் துண்டித்து விட்டார்.
1 hour(s) ago