உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளிக்கு 700 புதிய ரக சேலைகள் கோ - ஆப்டெக்ஸ் அறிமுகம்

தீபாவளிக்கு 700 புதிய ரக சேலைகள் கோ - ஆப்டெக்ஸ் அறிமுகம்

சென்னை:தீபாவளியை முன்னிட்டு, சென்னை எழும்பூர் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், புதிய ரக சேலை விற்பனையை, கைத்தறி துறை அமைச்சர் காந்தி, நேற்று துவக்கி வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது: மொத்தம் உள்ள, 150 கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில், 48ஐ நவீனமயமாக்கி விற்பனை அதிகரிக்கப்பட்டு உள்ளது.தீபாவளியை முன்னிட்டு, தேசிய வடிவமைப்பு நிறுவனம் மற்றும் தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனங்களில் படித்த வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த, இளம் மகளிருக்கான ஆயத்த ஆடைகளான, 'குர்த்தீஸ், கிராப் டாப், சார்ட்ஸ்' உள்ளிட்ட ரகங்களை அறிமுகம் செய்து உள்ளோம்.அவற்றுடன், புதிய வடிவமைப்பிலான, 700 வகை பட்டு சேலை ரகங்களுடன், மூங்கில் இழையால் உற்பத்தி செய்யப்பட்ட துண்டு ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. கோ - ஆப்டெக்சில் துணி வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்புரிமை அட்டை வழங்கப்படும். இதன் வாயிலாக, வாடிக்கையாளர்கள் வாங்கும், 100 ரூபாய் மதிப்புக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். ஒரு புள்ளியின் மதிப்பு ஒரு ரூபாய். ஒவ்வொரு முறை வாடிக்கையாளர்கள் துணிகள் வாங்கும் போதும், இந்த புள்ளிகள் அவர்களின் கணக்கில் சேரும். அவற்றைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் வாங்கும் மதிப்பில், புள்ளிகளுக்கு நிகரான தொகை போக, மீதி பணம் வசூலிக்கப்படும். கடந்த தீபாவளிக்கு, 76 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய நிலையில், நடப்பாண்டில் 100 கோடி ரூபாய் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 'ஆன்லைன்' வாயிலாக இதுவரை, 1.10 கோடி ரூபாய்க்கு துணிகள் விற்பனையாகி உள்ளன.தமிழகத்தில் முதல் முறையாக, கடந்த ஆண்டு டிச., 31க்குள் வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டன. நடப்பாண்டிலும், 1 கோடியே 77 லட்சம் குடும்ப அட்டைதார்களுக்கு, பொங்கல் பண்டிகைக்கு முன்பே, வேஷ்டி, சேலைகள் வழங்கப்படும். இதுவரை 45 லட்சம் வேஷ்டி, சேலைகள் தயாராக உள்ளன. தீபாவளியை ஒட்டி முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு வழங்கப்படும், வேஷ்டி, சேலைகள், 100 சதவீதம் தயாராக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ