மொபைல் போனை காணோம் நீதிபதியிடம் பெண் வக்கீல் புகார்
சென்னை:'காணாமல் போன மொபைல் போனை, போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை' என, நீதிபதியிடம் பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருபவர் பர்கீன் பேகம். இவர், சென்னை குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதிக்கு அனுப்பியுள்ள புகார் மனு:சென்னை 6வது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வரும் ஒரு வழக்கில் ஆஜராக, கடந்த மாதம் 29ல் சென்றேன். அங்குள்ள பொது தளத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன். அப்போது, என் அருகில் மொபைல் போனை வைத்து விட்டு, வழக்கு ஆவணங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர், மொபைல் போனை எடுக்க மறந்து, நீதிமன்றத்துக்குள் சென்று விட்டேன். திரும்பி வந்து பார்த்தபோது, மொபைல் போனை காணவில்லை. இதுகுறித்து, 6வது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி மற்றும் எஸ்பிளனேடு போலீசில் புகார் செய்துஉள்ளேன்.என் மொபைல் போனை திருடியது யார் என, இதுவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இங்கு, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லாததால், திருடியவரை, போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.இதுபோல திருட்டு சம்பவங்களை தடுக்க, அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். திருடியவர்களை கண்டுபிடித்து, போனை மீட்டுத் தர போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.