உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக அரசு மீது 44% மக்கள் அதிருப்தி: கருத்துக்கணிப்பில் தகவல்

திமுக அரசு மீது 44% மக்கள் அதிருப்தி: கருத்துக்கணிப்பில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் சுமார் 44 சதவீத மக்கள் ஸ்டாலினின் ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்னும் ஓரிரு மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஒவ்வொரு கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், டைம்ஸ் நவ் மற்றும் மேட்ரிஸ் செய்தி நிறுவனங்கள் இணைந்து தேர்தல் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் அடங்கிய தென் இந்தியாவில் பா.ஜ., 27 இடங்களை கைப்பற்றும் என்றும், அதில் 21 இடங்கள் கர்நாடகாவில் இருந்து மட்டும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் அங்கு 28ல் 25 இடங்களை பா.ஜ., கைப்பற்றி இருந்தது. கர்நாடகாவில் 46.2 சதவீத ஓட்டுகளை பா.ஜ.,வும், 42.3 சதவீத ஓட்டுகளை காங்கிரசும், 8.4 சதவீத ஓட்டுகளை குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்

தமிழகத்தை பொறுத்தவரை 39 தொகுதிகளில் திமுக - காங்கிரஸ் அடங்கிய இண்டியா கூட்டணி 36 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், பா.ஜ., ஒரு இடத்திலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி 59.7 சதவீத ஓட்டுகளுடன் முதலிடத்தையும், பா.ஜ., கூட்டணி 20.4 சதவீத ஓட்டுகளுடன் 2வது இடத்தையும், அதிமுக கூட்டணி 16.3 சதவீத ஓட்டுகளுடன் 3வது இடத்தையும் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. பா.ஜ., கூட்டணியில் இருந்து பிரிந்த அதிமுக லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு அடுத்த இடத்தையே பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், அதிமுக தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

அதிருப்தி

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 44 சதவீதம் பேர் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என 32 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

தெலுங்கானா

தெலுங்கானாவில் சமீபத்தில் ஆட்சியை பிடித்த காங்., லோக்சபா தேர்தலில் 17ல் 9 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. பா.ஜ., 5 இடங்களிலும், பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சி 2 இடங்களிலும், ஓவைசி கட்சி ஒரு இடத்திலும் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, கேரளாவில் '0'

ஆந்திரா மற்றும் கேரளாவில் பா.ஜ., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 19 இடங்களிலும், தெலுங்கு தேசம் - ஜனசேனா கூட்டணி 6 இடங்களிலும் வெல்லும். கேரளாவில், இண்டியா கூட்டணி 74.9 சதவீத ஓட்டுகளையும், பாஜ., கூட்டணி 19.8 சதவீத ஓட்டுகளையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ