ஊழல் செய்வதிலும், இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதிலும் காப்புரிமை பெற்றுள்ள தி.மு.க.,வின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.மேட்டுப்பாளையத்திலும், வேலுாரிலும் நேற்று நடந்த பொதுக் கூட்டங்களில் பேசிய பிரதமர், தி.மு.க.,வையும், அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y9iyg0yw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மணல் கொள்ளை
மதம், ஜாதி, மொழி ஆகியவற்றின் பெயரால் நீண்டகாலமாக தமிழக மக்களை தி.மு.க., பிரித்தாள்கிறது; இரண்டு ஆண்டுகளில் மணல் கொள்ளை வாயிலாக 4,200 கோடி ரூபாய் சுருட்ட முடிந்திருக்கிறது என்றால், இத்தனை ஆண்டுகளில் எத்தனை கோடிகளை ஊழல் மூலமாக அக்கட்சி சம்பாதித்திருக்கும் என்பதை தமிழக மக்கள் கணக்கிட்டு பார்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். ஒரு குடும்பம் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதற்காக தமிழகத்தையும், தமிழக மக்களையும் வஞ்சித்து வருவதை மக்கள் எப்போது உணர்கின்றனரோ, அந்த நிமிடமே தங்கள் வீழ்ச்சி துவங்கிவிடும் என்பதை தி.மு.க., தலைமையும் புரிந்து கொண்டிருப்பதாக மோடி சொன்னார்.பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, இரு நகரங்களிலும் நடந்த பிரசாரக் கூட்டங்களில் மோடி பேசினார். முக்கிய அம்சங்கள்
மேட்டுப்பாளையத்தில் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர் தொகுதிகளின் பா.ஜ., வேட்பாளர்கள் அண்ணாமலை, முருகன், வசந்தராஜன், முருகானந்தம் ஆகியோரை ஆதரித்து பிரதமர் பேசினார். முன்னதாக வேலுார் கோட்டை மைதானத்தில் வேலுார் ஏ.சி.சண்முகம், அரக்கோணம் பாலு, திருவண்ணாமலை அஸ்வத்தாமன், ஆரணி கணேஷ்குமார், தர்மபுரி சவுமியா, கிருஷ்ணகிரி நரசிம்மன் ஆகியோருக்கு ஓட்டு கேட்டார். முந்தைய நாள் மாலையில் சென்னையில் நடந்த, ரோடு ஷோ'வில் மக்கள் காட்டிய அன்பு குறித்து மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.இரு நகரங்களிலும் மோடி நிகழ்த்திய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:தமிழகத்தில் நான் செல்லும் இடமெல்லாம் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான அலை வீசுவதை காண்கிறேன். இந்த மாற்றத்தை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. குடும்ப அரசியல்
தமிழக மக்கள் தி.மு.க.,வுக்கு விடை கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைக்க தயாராகி விட்டனர். தி.மு.க.,வின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் உத்வேகம் பா.ஜ.,வுக்கு மட்டுமே உள்ளது.தி.மு.க.,வும், அது முட்டு கொடுக்கும் காங்கிரசும் பச்சையான குடும்ப அரசியல் கட்சிகள். பல தலைமுறைகளாக ஆட்சி செய்தும் அவர்களின் அதிகாரப் பசி அடங்கவில்லை. மக்களுக்காக கட்சி நடத்துவதாக கூறுவர்; ஆனால், மகன், மகள், பேரன், பேத்திக்கு மட்டுமே கட்சியிலும், ஆட்சியிலும் உயர் பதவிகளை வழங்குவர். பட்டியலின மக்களோ, ஏழைகளோ, பழங்குடி இனத்தவரோ பதவிக்கு வருவதை ஏற்கவே மாட்டார்கள். 'இண்டியா' கூட்டணி, பிரிவினைவாதம் என்ற ஆபத்தான விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறது. தி.மு.க.,வும் அதே பிரிவினைவாதத்தை தொடர்கிறது. பயங்கரவாதத்தை தடுக்காமல், தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்கிறது.சுரண்டலுக்கும், ஊழலுக்கும் இன்னொரு பெயர் தான் தி.மு.க., இப்போது நம் நாடு '5ஜி' என்ற சாதனை படைத்து வருகிறது. ஆனால், தி.மு.க., 2ஜி ஊழல் செய்து, நாட்டையே அவமானப்படுத்தியது. ஊழல்வாதிகளை தண்டிப்போம் என்கிறோம்; அவர்களோ காப்பாற்றுவோம் என்கின்றனர். அதிகார ஆணவத்தில் மிதக்கிறது தி.மு.க., அதனால் தான், 'அண்ணாமலையா; அது யார்?' என்று தி.மு.க., தலைவர் கேட்கிறார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் அவர்; காவல் துறையில் பணியாற்றியுள்ளார். களத்தில் வீரம் காட்டுகிறார். அவரைத் தெரியாதாம். குடும்ப அரசியல் செய்யும் அவர்களுக்கு, சாதாரண குடும்பத்திலிருந்து ஒரு இளைஞன், நேர்மையான அரசியல் செய்ய வருவது பிடிக்கவில்லை.இது, மோடியை நாட்டை விட்டே வெளியேற்றும் தேர்தல் என்கிறார் தி.மு.க., தலைவர். நான் சொல்கிறேன்... இந்த தேர்தல், ஊழலை, குடும்ப அரசியலை, போதை வியாபாரிகளை, தேச விரோத சக்திகளை துரத்தப் போகும் தேர்தல்.உலகமே முன்னேறும்போது, தி.மு.க., இன்னும் பழைய சிந்தனையில் ஊறிக் கிடக்கிறது. அதன் குடும்ப அரசியலால், தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லாமல் தவிக்கின்றனர். அவர்களிடம் தி.மு.க., எதிர்பார்க்கும் மூன்று விஷயங்கள் என்ன? ஒன்று, அரசியல் குடும்பத்திலிருந்து வந்திருக்க வேண்டும். இரண்டு, ஊழல் செய்ய தெரிய வேண்டும். மூன்று, பாரம்பரியமான தமிழ் கலாசாரத்தை எதிர்க்க வேண்டும். இந்த மூன்றையும் வைத்து, தி.மு.க., தமிழகத்தை பின்னோக்கி அழைத்து செல்கிறது.ஊழலுக்கு முதல் காப்பீட்டு உரிமை யார் வைத்துள்ளனர் என்றால், அது, தி.மு.க., தான். அதேபோன்று, ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து, தமிழகத்தை கொள்ளையடிப்பதை தவிர வேறு எந்த வேலையும் செய்வதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில், மணல் கொள்ளை மட்டும் 4,200 கோடி ரூபாய், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் அளவிற்கு நடந்துள்ளது. அப்படி பார்த்தால், கற்பனை செய்து பாருங்கள், தமிழகம் முழுவதும் எந்த அளவிற்கு கொள்ளை அடிக்கின்ற விளையாட்டு சர்வ சாதாரணமாக நடந்த கொண்டிருக்கிறது.தமிழக வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மத்திய அரசு கொடுக்கிறது. அதை, தி.மு.க., ஊழல் மூலமாக கபளீகரம் செய்கிறது. தமிழகத்தின் எதிர்காலம் மட்டும் இவர்களால் பாழடிக்கப்படவில்லை. குழந்தைகளைக்கூட காப்பாற்ற முடியவில்லை. பள்ளி அருகிலேயே போதைப் பொருள் வியாபாரம் நடக்கிறது. போதை மாபியாக்கள் யாருடைய பாதுகாப்பில் இருக்கின்றனர் எனறு உங்களுக்கு தெரியுமா? என்.சி.பி.,யால் கைது செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் தலைவன், எந்த குடும்பத்தோடு தொடர்பில் இருக்கிறார் தெரியுமா?இந்த பாவங்கள் அத்தனைக்கும், வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர். தி.மு.க., 50 ஆண்டு காலமாக என்ன ஊழல்களை, மோசமான ஆபத்தான அரசியலை செய்து கொண்டிருக்கிறதோ, அவற்றை அம்பலப்படுத்துவதில் நான் உறுதியோடு இருக்கிறேன். .இவ்வாறு மோடி பேசினார்.அ.தி.மு.க.,வை விமர்சிக்காத மோடி
பிரதமர் மோடி தன் பேச்சின்போது, தி.மு.க., மற்றும் காங்கிரசை விமர்சித்தபோதும், எந்த எதிர்க்கட்சி பிரமுகர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை. தி.மு.க., - எம்.பி., ராஜா குறித்த விமர்சனத்தின்போது கூட, தி.மு.க.,வின் ஒரு முக்கிய தலைவர் என்று மட்டுமே குறிப்பிட்டார்.தி.மு.க.,வை மட்டுமே அதிகம் விமர்சித்த மோடி, அ.தி.மு.க., பற்றி குறிப்பிடவே இல்லை. பொதுவாகவே பா.ஜ.,வினர் பேச்சில், இரு திராவிடக் கட்சிகளும் தமிழகத்தை மோசமாக ஆட்சி செய்கின்றனர் எனக் குறிப்பிடுவர். ஆனால் இம்முறை, 'திராவிடக் கட்சிகள்' என்ற சொல்லையே பிரதமர் மோடி தவிர்த்து விட்டார். அ.தி.மு.க., பற்றியும் பேசவில்லை. பா.ஜ.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே தான் போட்டி என்பதை, அழுத்தம் திருத்தமாக உணர்த்துவதுபோல, அவரது பேச்சு அமைந்திருந்தது.---கஞ்சா விற்ற காசு
தமிழக மக்களே... தி.மு.க., கொடுக்கும் காசு, கஞ்சா மூலம் வந்த காசு; உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை உறிஞ்சும் காசு. 33 மாதங்களாக ஊழல் செய்த காசு. பிரதமர் மோடி அன்பை மட்டுமே இங்கு கொண்டு வந்திருக்கிறார். தமிழகத்தில் பிறக்காத ஒரு மறத்தமிழன் மோடி.- அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர். -நமது நிருபர் குழு.-