உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் நடத்திய பேச்சில் உடன்பாடு கர்நாடகாவில் லாரி ஸ்டிரைக் வாபஸ்

அமைச்சர் நடத்திய பேச்சில் உடன்பாடு கர்நாடகாவில் லாரி ஸ்டிரைக் வாபஸ்

ஓசூர்:கர்நாடகாவில், அமைச்சருடன் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், நேற்று மாலை லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது.கர்நாடகா மாநிலத்தில் கடந்த, 15 முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று, 3வது நாளாக நடந்த போராட்டத்தில், 95 சதவீத லாரிகள் இயங்கவில்லை.இதனால் தினமும், 4,000 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. கர்நாடகா மட்டுமின்றி, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும், 15,000க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை.இதனால், பிற மாநிலங்களில் இருந்து கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு வர வேண்டிய வெங்காயம், பருப்பு, கனிமவளங்கள் வரவில்லை.நேற்று முன்தினம் அரசுடன் நடந்த பேச்சு தோல்வியடைந்த நிலையில், நேற்று மீண்டும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்காரெட்டியுடன் லாரி உரிமையாளர்கள் பேச்சு நடத்தினர்.அப்போது, மாநில எல்லையான அத்திப்பள்ளியிலுள்ள போக்குவரத்துத்துறை சோதனைச்சாவடியை அகற்ற வேண்டும்.உயர்த்திய டீசல் விலையை திரும்ப பெற வேண்டும். இல்லா விட்டால் லாரிகளுக்கு நிரந்தர வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும். மாநில அரசின் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்.மேலும், 9 ஆண்டுகளை கடந்த லாரிகளுக்கு வசூல் செய்வதாக அறிவித்த, 15,000 ரூபாயை வசூல் செய்யக்கூடாது என்ற கோரிக்கைகளை, லாரி உரிமையாளர்கள் மீண்டும் முன்வைத்தனர். தீவிர ஆலோசனைக்கு பின், லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை, அமைச்சர் ராமலிங்காரெட்டி ஏற்றார். அதனால், நேற்று மாலை போராட்டம் முடிவுக்கு வந்தது. மாலையில் இருந்து தமிழகம் - கர்நாடகா இடையே லாரி போக்குவரத்து துவங்கியது.அத்துடன், பிற மாநில லாரிகளும், கர்நாடகா வழியாக தமிழகத்திற்குள் வர துவங்கின.இது தொடர்பாக, கர்நாடகா மாநில லாரி ஓனர்ஸ், ஏஜன்ட் அசோசியேஷன் தலைவர் சண்முகப்பா கூறியதாவது:லாரி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. கர்நாடகாவில் ஆட்டோ, டாக்சி போன்றவற்றுக்கு வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது போல, லாரிக்கும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், 14 மாநிலங்களில் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. அங்குள்ளதை ஆய்வு செய்து, இரு மாதங்களில் அத்திப்பள்ளியில் உள்ள போக்குவரத்து சோதனைச்சாவடியை அகற்றுவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். மாநில சுங்கச்சாவடிகள் எவ்வளவு செலவு செய்துள்ளதோ, அதை வசூல் செய்தவுடன், சாலையை அரசிற்கு விடுவதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 9 ஆண்டுகளை கடந்த லாரிகளுக்கு, 15,000 ரூபாய் செலுத்த அரசு கூறியிருந்தது.அதை, ஆறு மாதத்திற்கு வசூல் செய்யாமல் நிறுத்தி வைப்பதாகவும், அதன் பின் ஆலோசித்து வெகுவாக குறைப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளார். அதனால் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ