வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திராவிட திமுக அரசுக்கு அவ்வப்போது வயிற்றில் புளியை கரைக்க இந்த மாதிரி புயல் சின்னம் அடிக்கடி ஏற்பட வேண்டும்.
சென்னை: 'தென்கிழக்கு வங்கக்கடலில், நாளை உருவாகும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், வரும், 7ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அந்த மையத்தின் அறிக்கை: தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே, இன்று புதிதாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகலாம். அதன் தாக்கத்தால் அப்பகுதியில், வரும், 7ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. 40 சதவீதம்
இது, 7 முதல் 11ம் தேதி வரையிலான நாட்களில், புயல் சின்னமாக வலுவடைந்து, தமிழக கரையை நெருங்கலாம். தற்போதைய நிலவரப்படி இந்த நிகழ்வுக்கு, 40 சதவீதம் மட்டுமே சாத்தியக்கூறுகள் உள்ளன. இதே காலகட்டத்தில், தென்மேற்கு வங்கக் கடலில், தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில், புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன. இதனால், தமிழகம், தெற்கு ஆந்திரா, கேரள பகுதிகளில், வரும் 7 முதல் 11 வரையிலான நாட்களில், கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் நேற்றைய அறிக்கை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில், 16 செ.மீ., மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி எஸ்டேட், குன்னுார், கோத்தகிரி, அழகரை எஸ்டேட் ஆகிய இடங்களில் தலா, 14 செ.மீ,; கன்னியாகுமரி, ஆதார் எஸ்டேட் பகுதிகளில் தலா, 13 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. மேகமூட்டம்
தெற்கு கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய இடங்களில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்; 7ம் தேதி வரை இந்த மிதமான மழை தொடரவும் வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திராவிட திமுக அரசுக்கு அவ்வப்போது வயிற்றில் புளியை கரைக்க இந்த மாதிரி புயல் சின்னம் அடிக்கடி ஏற்பட வேண்டும்.