ராகுலுக்கு மதிய உணவு!
சென்னை: சென்னை வந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு, முதல்வர் விஜய் தன் வீட்டில் நேற்று மதிய உணவு விருந்து அளித்து உபசரித்தார். அரசியல் நிலவரம் குறித்து, இருவரும் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினர். இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி, டில்லி உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் நடந்து வரும் பரபரப்பான சூழலில், மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ராகுல் நேற்று பகல் 12:45 மணிக்கு சென்னை வந்தடைந்தார்; விமான நிலையத்தில் இருந்து நேராக காரில், மதியம் 1:30 மணிக்கு நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய் வீட்டுக்கு சென்றார். வீட்டின் வாசலுக்கு வந்து, ராகுலை ஆரத்தழுவி விஜய் வரவேற்று அழைத்துச் சென்றார். முதல்வர் வீட்டில் ராகுலுக்கு மதிய உணவு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது, மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், த.வெ.க.,வின் வெற்றிக்கு ராகுல் வாழ்த்து கூறினார். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி டில்லியில் ராகுல், பிரியங்கா நடத்திய போராட்டத்திற்கு, விஜய் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார். பின்னர், இருவரும் ஒரு மணி நேரம், தமிழக மற்றும் தேசிய அரசியல் நிலவரம் குறித்து விரிவாக பேசியுள்ளனர். ‘இடைத்தேர்தல் வெற்றியால், த.வெ.க., ஆட்சிக்கு இனி பெரிய அளவில் நெருக்கடிகள் இருக்காது; அரசின் செயல்பாடுகள் இனி வேகமெடுக்கும்’ என்று விஜய் கூறியுள்ளார். ‘மத்திய பா.ஜ., அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான எந்த போராட்டமும், கடந்த 12 ஆண்டுகளாக வெற்றி பெறவில்லை. ஆனால், தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிரான போராட்டத்தில் தன்னெழுச்சியாக இளைஞர்கள் திரள்கின்றனர். இது, பெரும் நம்பிக்கை அளிக்கிறது. இனி வரும் தேர்தல்களில், பா.ஜ.,வை நிச்சயம் வீழ்த்தி விடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது’ என, ராகுல் கூறியுள்ளார். இடைத்தேர்தலில் அ.தி.மு.க., மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது குறித்தும், தி.மு.க., தன் ஓட்டு வங்கியை தக்க வைத்திருப்பது பற்றியும், டில்லி போராட்டங்கள் மற்றும் நடப்பு அரசியல் நிலவரம் தொடர்பாகவும் இருவரும் விரிவாக பேசியதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார். பின்னர், இருவரும் பகல் 3:00 மணியளவில், ஒரே காரில் பாலவாக்கத்தில் உள்ள, ‘பாஸ்க் பை காபி’ என்ற, உயர் தர காபி கடைக்கு சென்றனர்; அங்கு மக்களுடன் மக்களாக அமர்ந்து, ‘டிராமிசு ஜார், கேப்பச்சினோ, அமெரிக்கானோ ஐஸ்’ போன்றவற்றை சாப்பிட்டனர். அங்கு வந்திருந்த பொது மக்களுடன் இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 10 நிமிடங்கள் அங்கிருந்த ராகுலை, முதல்வர் விஜய் வழியனுப்பி வைத்தார். இந்த சந்திப்பின் போது, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது மிர், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், சட்டசபை காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பட் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முக்கியத்துவம் பெற்ற சந்திப்பு சட்டசபை தேர்தலில் த.வெ.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைக்க ராகுல் உதவி செய்தார். அதற்கு பலனாக, ஐந்து எம்.எல்.ஏ.,க்களை கொண்ட காங்கிரசுக்கு, இரண்டு அமைச்சர் பதவிகளை முதல்வர் விஜய் வழங்கினார். ஆனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட த.வெ.க.,வினர், வரும் 2029 லோக்சபா தேர்தலில், ‘விஜய் தான் பிரதமர் வேட்பாளர்’ என்று பேசி வந்தனர். அதற்கு பதிலடியாக, ‘ராகுலை பிரதமர் வேட்பாளராக முதல்வர் விஜய் ஏற்காவிட்டால், அமைச்சரவையில் இருந்து விலகவும் தயங்க மாட்டோம்’ என, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை விடுத்தார். இதனால், இரு கட்சிகளுக்கும் இணக்கமற்ற சூழல் உருவானது. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாமிற்கு வந்த ராகுல், முதல்வர் விஜயை சந்திப்பார் என்று கூறப்பட்டது; ஆனால், சந்திப்பு நடக்கவில்லை. இந்நிலையில் முதல்வர் விஜயை ராகுல் சந்தித்திருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வெற்றிக்கு பின் சந்திப்பை
உறுதி செய்த விஜய்மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக ராகுல் சென்னை வருவது, இரு வாரங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கூட்டணி கட்சியான த.வெ.க., தலைவரும், முதல்வருமான விஜயை, ராகுல் சந்திக்க மாட்டார் என்ற செய்திகள் வெளியாகின.இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்ட போது, ‘சந்திப்பு இன்னும் முடிவாகவில்லை; முதல்வர் விஜய் தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை’ என்றனர். இடைத்தேர்தல் நடந்த இரு தொகுதிகளிலும் போட்டி கடுமையாக இருக்கும்; தாராபுரத்தில் வெல்வது கடினம் என, கணிப்புகள் வெளியாகின. ஒரு தொகுதியில் தோற்றால் கூட, ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும். அப்போது மத்திய அரசின் தயவு தேவைப்படும்.எனவே, ராகுல் சந்திப்பை, முதல்வர் விஜய் தவிர்க்க நினைத்ததாக கூறப்பட்டது. ஆனால், கணிப்புகளை மீறி, இரு தொகுதிகளிலும் த.வெ.க., வென்றது. அதன்பிறகே, ராகுல் சந்திப்பை விஜய் உறுதிப்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.