உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்-சாண்ட், ஜல்லி விலை குறையவில்லை: துரைமுருகன் அறிவித்தும் பலனில்லை

எம்-சாண்ட், ஜல்லி விலை குறையவில்லை: துரைமுருகன் அறிவித்தும் பலனில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'எம்-சாண்ட், ஜல்லி போன்றவை ஏற்றப்பட்ட விலையில் இருந்து, 1,000 ரூபாய் குறைத்து விற்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தும், கூடுதல் விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாக, கட்டுமானத் துறையினர் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், கடந்த, 16ல் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கினர். அரசுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறி, ஏப்., 21ல் எம்-சாண்ட், கருங்கல் ஜல்லி, பி-சாண்ட் போன்றவற்றின் விலையை, யூனிட்டுக்கு தலா, 1,000 ரூபாய் உயர்த்தினர். இதனால், கட்டுமானப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது.விலை ஏற்றத்திற்கு, இந்திய கட்டுமான வல்லுநர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன், குவாரி, கிரஷர் உரிமையாளர்களை அழைத்து, ஏப்ரல், 27ல் பேச்சு நடத்தினார். இதன் அடிப்படையில் எம்-சாண்ட், பி-சாண்ட், ஜல்லி போன்றவற்றை, ஏற்றப்பட்ட விலையில் இருந்து, 1,000 ரூபாய் குறைத்து விற்க, குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டதாக அரசு அறிவித்தது. அதன்படி, கட்டுமான பணிக்கான எம்-சாண்ட், பி-சாண்ட், ஜல்லி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசின் அறிவிப்பை குவாரி உரிமையாளர்கள் ஏற்க மறுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கூடுதல் விலையிலேயே ஜல்லி, எம்-சாண்ட் போன்ற பொருட்கள் விற்கப்படுகின்றன.

இதுகுறித்து கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:

அரசு அறிவித்தபடி, ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட் விலை குறையவில்லை. உயர்த்தப்பட்ட விலைப்பட்டியல் அடிப்படையிலேயே, பெரும்பாலான குவாரி உரிமையாளர்கள், தற்போதும் விற்பனை செய்கின்றனர். அரசு வெளியிட்ட அறிவிப்பை, குவாரி உரிமையாளர்கள் துளியும் மதிக்கவிலை என்பது, இதன் வாயிலாக உறுதியாகிறது. இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வரி விதிப்புக்கு சம்பந்தம் இல்லாத வகையில், அதிகபட்ச விலையில் விற்பனை செய்யும் நபர்களிடம் இருந்து, குவாரிகளை அரசுடைமையாக்க வேண்டும். அப்போது தான் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரசு அறிவித்தபடி விலையை குறைக்க, குவாரி உரிமையாளர்கள் நேரடியாக சம்மதித்தனர். இதில், எந்தெந்த பகுதிகளில், விலைக்குறைப்பு அமலுக்கு வரவில்லை என்பது குறித்து விசாரித்து வருகிறோம். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட குவாரிகள் மீது, இத்தகைய புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து விசாரித்து வருகிறோம். விலையை குறைக்காத, குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி