| ADDED : டிச 20, 2025 05:24 AM
விருதுநகர்: நாட்டிலேயே முதன்முறையாக டில்லி -- மீரட் இடையே மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆர்.ஆர்.டி.எஸ்.,) தொடங்கப்பட்டது. 2023 அக்., முதல் 'நமோ பாரத்' எனும் பெயரில் தேசிய தலைநகர் பகுதி (என்.சி.ஆர்.,) போக்குவரத்து கழகம், அதி விரைவு ரயில்களை இயக்கி வருகிறது. ஆறு பெட்டிகள் கொண்ட நமோ பாரத் ரயில்களில் 450 பேர் வரை பயணிக்க முடியும். மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் பயணிக்கும். சி.சி.டி.வி., கேமரா, அவசரகால கதவுகள் உள்ளிட்ட பாதுகாப்பு சிறப்பம்சங்களுடன் இயக்கப்படுகின்றன. காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் எளிதாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்தாண்டு நடைபெற்ற தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆர்.ஆர்.டி.எஸ்., போன்று தமிழகத்தில் மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்து வதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டது. சென்னை -- செங்கல்பட்டு -- திண்டிவனம் -- விழுப்புரம், சென்னை -- காஞ்சிபுரம் -- வேலுார், கோவை -- திருப்பூர்-- ஈரோடு -- சேலம் ஆகிய வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் அதிவேக ரயில்வே அமைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென் தமிழகத்திலும் இத்தகைய ரயில் போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம் இணைச் செயலாளர் ஹரிசங்கர் கூறியதாவது: ஆர்.ஆர்.டி.எஸ்., மூலம் இயக்கப்படும் அதிவேக ரயில்கள் தமிழகத்தில் 3 இடங்களில் இயக்க அறிவித்துள்ளனர். அவ்வழித்தடங்கள் 100 முதல் 150 கி.மீ.,க்குள் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கிறது. அவ்வகையில் திண்டுக்கல் -- மதுரை -- விருதுநகர் -- சிவகாசி -- ராஜபாளையம் வழித்தடம் 150 கி.மீ., துாரம் வரும். கோவைக்கு அடுத்து நுால் உற்பத்தியில் தமிழகத்தில் 2ம் இடத்தில் ராஜபாளையம் உள்ளது. தளவாய்புரம் உள்நாட்டு துணி உற்பத்தியில் முதன்மை வகிக்கிறது. சத்திரப்பட்டியில் மருத்துவ பயன்பாட்டிற்கான துணிகள் தயாரிக்கப் படுகின்றன. சிவகாசியில் பட்டாசு உற்பத்தியும், திருமங்கலத்தில் சிப்காட், எய்ம்ஸ் உள்ளன. இதனால் வியாபாரம், தொழில் நிமித்தமாக மக்கள் அதிகம் பயணிக்கும் வழித்தடமாக உள்ளதால் மேற்கண்ட தொழில் நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் சேவை ஏற்படுத்த வேண்டும், என்றார். தெற்கு ரயில்வே பயணிகள் சங்க பொதுச் செயலாளர் பத்மநாதன் கூறுகையில், ''சென்னை -- மதுரை இடையே 4 மணி நேரத்தில் வந்து செல்லும் வகையில் 'நமோ பாரத்' ரயில் இயக்க வேண்டும்'' என்றார்.