உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மதுரை மீனாட்சியம்மன் கோவில் சொத்து விபரங்களில் குழப்பம்; அறிக்கை கேட்கிறது உயர் நீதிமன்றம்

 மதுரை மீனாட்சியம்மன் கோவில் சொத்து விபரங்களில் குழப்பம்; அறிக்கை கேட்கிறது உயர் நீதிமன்றம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அதன் உப கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், கோவில் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவரங்கள், வருவாய் தரப்பின் விவரங்களுடன் பொருந்தாததால், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அதன் உப கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்க கோரி, சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவை, நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. அக்., 7 விசாரணையின் போது கோவில் தரப்பு, 'மீனாட்சி அம்மன் கோவில், அதன் உப கோவில்களுக்கு 12 மாவட்டங்களில், 1,233.98 ஏக்கர் நிலம் உள்ளது. மதுரை செல்லுாரில், 8.37 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. வாடகைதாரர்களாக தொடராதவர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, ஆவணங்களை தாக்கல் செய்தது. நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர், 'நுாற்றுக்கணக்கான ஏக்கருக்கு பட்டா மேல்முறையீட்டு மனுக்கள் உள்ளன. தேவஸ்தானம் சார்பில் எத்தனை மனுக்கள் நிலுவையில் உள்ளன என சமர்ப்பித்தால் வருவாய்த்துறைக்கும் ஒருங்கிணைந்து உத்தரவிட முடியும்' என, வாதிட்டார். நீதிபதிகள், 'கோவில் தரப்பிடம் உள்ள சொத்து விவரங்கள், வருவாய்த்துறையின் விவரங்களோடு ஒத்துப்போகவில்லை என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. என்ன செய்யலாம்?' என, கேள்வி எழுப்பினர். வருவாய் துறை தரப்பு, 'கோவில் தரப்பு விவரங்கள் பழையது. அதற்கு தீர்வு காண, மாறுதல்கள் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு விளக்க தயாராக உள்ளோம்' என்றனர். நீதிபதிகள், 'மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் அலுவலகத்தில் இரு தரப்பு கூட்டம் நவ., 22 காலை, 11:00 மணிக்கு நடத்தப்பட வேண்டும். வருவாய் துறை தரப்பினர் சொத்து விவரங்களை சமர்ப்பித்து கோவில் விவரங்களுடன் சரிபார்க்க வேண்டும். சொத்து விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு, விசாரணையை நவ., 26க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ