உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சந்தனக்கட்டை கடத்த சென்று முதலைகளிடம் சிக்கிய நபர்

சந்தனக்கட்டை கடத்த சென்று முதலைகளிடம் சிக்கிய நபர்

உடுமலை:கேரள மாநிலத்தில் சந்தனக்கட்டை கடத்திய இருவரை வனத்துறையினர் துரத்தியதால் ஓடையில் விழுந்து முதலையிடம் சிக்கினர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, கேரளா மாநிலம், மறையூர் ஆலாம்பட்டி வனப்பகுதியில், நேற்று முன்தினம் மதியம், இருவர் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சித்தனர். கேரள வனத்துறையினர், அவர்களை பிடிக்க முயற்சித்த நிலையில், வனத்திற்குள் ஓடினர். தமிழக வனப்பகுதியில், அமராவதி அணையின் பின் பகுதியிலுள்ள புங்கன் ஓடை பகுதியில், இரவு, 11:00 மணிக்கு, அவர்களை கேரள வனத்துறையினர் பார்த்துள்ளனர். வனத்துறையினரை பார்த்ததும், தப்பிக்க புங்கன் ஓடைக்குள் இருவரும் குதித்தனர். ஒருவர் மறு கரைக்கு சென்ற நிலையில், முதலைகளுக்கு மத்தியில், அங்குள்ள செடியை பிடித்த படி, உயிருக்கு போராடிய நிலையில் மற்றொருவர் தென்பட்டார். உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கேரளா மற்றும் உடுமலை தீயணைப்பு துறையினர் உள்ளே இறங்கி, முதலைகளை விரட்டி விட்டு, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, அவரை மீட்டு, கேரள வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர், சேலம் மாவட்டம், வேத நாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம், 52, எனவும், தப்பி ஓடியவர், அதே பகுதியை சேர்ந்த இளையராஜா எனவும் தெரிந்தது. சிக்கிய ஆறுமுகத்தை, கேரள வனத்துறையினர் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி