உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மரக்கார் பிரியாணி கடை உரிமையாளருக்கு பொருளாதார குற்றத்தில் முதல் குண்டாஸ்

மரக்கார் பிரியாணி கடை உரிமையாளருக்கு பொருளாதார குற்றத்தில் முதல் குண்டாஸ்

விருதுநகர்: மரக்கார் பிரியாணி கடை கிளை உரிமை தருவதாக, 12 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அதன் உரிமையாளர், பொருளாதார குற்றத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே விஜயரங்கபுரத்தை சேர்ந்தவர் கங்காதரன். இவர், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை தலைமையிடமாக வைத்து, 'மரக்கார் பிரியாணி, ட்ரோல் டோர் இந்தியா பிரைவேட் லிமிடெட், கத்தெல் காபே' ஆகிய நிறுவனங்களை துவக்கியுள்ளார். இதில், பிரியாணி கடையின் கிளை உரிமை தருவதாகவும், மாதம், 50,000 ரூபாய் லாபம் பெறலாம் எனக் கூறி, 21 இடங்களில் மாதிரி கடைகளை திறந்து தமிழகம், கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த, 239 பேரிடம் தலா 5.18 லட்சம் ரூபாய் என, 12 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றார். ஆனால், கிளைகளை துவங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதால் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கங்காதரன், அவரது மனைவி மரியநாயகம் மீது வழக்கு பதிந்தனர். கங்காதரன் ஜூலை 7ல் கைது செய்யப்பட்டு, விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். பொருளாதார குற்றப்பிரிவு தென் மண்டல எஸ்.பி., சரவணக்குமார் பரிந்துரையில், விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா, குண்டர் தடுப்பு சட்டத்தில் கங்காதரனை கைது செய்ய உத்தரவிட்டார். பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டதற்காக தமிழகத்திலேயே முதல் முறையாக கங்காதரன் குண்டர் சட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை