கால்நடை கணக்கெடுப்பு துவங்கியதால் கோமாரி நோய் தடுப்பூசி பணி தாமதம்
விருதுநகர் : தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கி நடப்பதால் கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.நாடு முழுவதும் 21 வது கால்நடைகள் கணக்கெடுப்பு பணி அக்.,25ல் துவங்கி நடக்கிறது. இதற்காக ஒப்பந்த அடிப்படையில் கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அதிகாரிகளுடன் இணைந்து பணிகளை செய்து வருகின்றனர். மழைக்காலம் துவங்கும் முன் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால் கால்நடைகளை தாக்கும் நோய்கள் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலை உண்டாகியுள்ளது.இதனால் மாடுகளுக்கு வாய், கால், மடியில் கொப்புளங்கள், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைதல், தாயிடம் பால் குடிக்கும் கன்றுகள் இறப்பு, சினை மாடுகளில் கன்று வீசுதல், சினைப்பிடிக்காதிருந்தல் உள்ளிட்ட அறிகுறிகுள் பரவலாக காணப்படுகிறது. தேசிய அளவில் கால்நடை கணக்கெடுப்பு பணி நடந்து வருவதால் தற்போது கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவது தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து கால்நடை மருத்துவமனை, மருந்தகங்களுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கணக்கின்படி கோமாரி நோய் தடுப்பூசி டிசம்பர் மாதம் செலுத்த வேண்டும். ஆனால் அதற்கு முன்பே தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என அரசு கூறினால் உடனடியாக இரு பணிகளையும் இணைத்து செய்ய தயார் நிலையில் உள்ளோம் என்றார்.