3 பேருக்கு மேல் காய்ச்சல் இருந்தால் கிராமத்தில் மருத்துவ முகாம்
சென்னை:''தமிழகத்தில், ஒரு கிராமத்தில் மூன்று பேருக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டால், அங்கு மருத்துவ முகாம் நடத்தப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிர மணியன் கூறினார். சென்னை சைதாப் பேட்டையில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு வணிக கடன் வழங்கும் முகாமை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். பின், அவர் கூறியதாவது: சாலையோர வியாபாரிகளுக்கு, 15,000, 25,000 மற்றும் 50,000 ரூபாய் கடன் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழையின்போது, 10,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டும் நடத்தப்படும். ஒரு கிராமத்தில், மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால், அங்கு மருத்துவ முகாம் நடத்தப்படும். சைதாப்பேட்டையில், அடையாறு ஆற்றாங்கரையோர பகுதிகள் உள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, 20,000 கன அடி அளவிற்கு தண்ணீர் திறந்து விட்டால் கூட, பாதிப்பு இல்லாத வகையில், ஆற்றங்கரை பலப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.