| ADDED : ஜன 01, 2026 01:45 AM
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் பதவி காலாவதியாகி ஒரு மாதம் ஆன நிலையில், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, இரண்டு ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் அறங்காவலர்களாக இரண்டு ஆண்டுகளுக்கு முன், அமைச்சர் தியாகராஜனின் தாய் ருக்மணி, தொழிலதிபர் பி.கே.எம்.செல்லையா, வழக்கறிஞர் அன்புநிதியின் மனைவி மீனா, டாக்டர் சீனிவாசன், சுப்புலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதில், தலைவராக ருக்மணி தேர்வு செய்யப்பட்டார். தற்போது கோவிலில் திருப்பணிகள் நடந்து வரும் நிலையில், பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கேற்ப பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நிர்வாக ரீதியாக அனுமதி பெற அறங்காவலர்கள் ஒப்புதல் அவசியம். ஆனால், அவர்களின் பதவிக்காலம் கடந்த நவ., 30ல் முடிந்தது. அவர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படாததாலும், புதியவர்கள் நியமிக்கப்படாததாலும் திருப்பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவானது. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, அறங்காவலர்களாக இருந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.