அதிகாரிகள் உடந்தையுடன் கனிமவள சுரண்டல்: சண்முகம்
ஸ்ரீவில்லிபுத்துார் : “தமிழகம் முழுதும் அரசு அதிகாரிகள் உடந்தையுடன், கனிமவளங்கள் எடுப்பதில் விதிமீறல் நடந்து வருகிறது,” என, மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம் குற்றம் சாட்டினார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளை, நேற்று காலை சந்தித்து பேசிய சண்முகம் அளித்த பேட்டி: இங்கு அமைக்கப்பட்டுள்ள கல் குவாரியால் விவசாயிகள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். கல் குவாரியால் வாழ்வாதாரம், மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. பொதுவாக, இயற்கை வளங்களான கனிமவளங்கள் சட்ட விரோதமாக, அனுமதி பெற்றதற்கு மாறாக மிக கூடுதலான அளவில் எடுப்பது போன்றவை அதிகாரிகள் துணையுடன் நடந்து வருகிறது. அரசு புறம்போக்கு நிலங்களிலும் இஷ்டத்துக்கு கனிமவளத்தை சுரண்டுகின்றனர். விதிமீறி நடக்கும் இந்த காரியங்களுக்கு, அதிகாரிகள் முழு அளவில் உடந்தையாக உள்ளனர்; அது கண்டிக்கத்தக்கது. பட்டாசு தொழிலில் பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க வேண்டும். விதிமுறைகளை கடைப்பிடிக்காத பட்டாசு ஆலை நிறுவனங்களின் உரிமையாளர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.