உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேவையான அளவு மட்டுமே ரசாயன உரங்களை பயன்படுத்துங்கள் விவசாயிகளுக்கு அமைச்சர் அறிவுரை

தேவையான அளவு மட்டுமே ரசாயன உரங்களை பயன்படுத்துங்கள் விவசாயிகளுக்கு அமைச்சர் அறிவுரை

சென்னை:''விவசாயிகள் தேவையான அளவு மட்டும், ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டும்,'' என, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். உரங்கள் இருப்பு மற்றும் வினியோகம் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், அவர் பேசியதாவது: இருப்பு மாதாந்திர ஒதுக்கீட்டின்படி, உர உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களுக்கு, எந்தவித குறைவுமின்றி உரம் வழங்க வேண்டும். அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கு, தேவையான உரங்களை, முன் கூட்டியே இருப்பு வைக்க வேண்டும். ரயில் நிலையங்களுக்கு வரும் உரங்களை, கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு எடுத்து செல்ல, பிரதிநிதிகளை நியமித்து, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாவட்ட வேளாண் இணை மற்றும் உதவி இயக்குநர், தங்கள் மாவட்டங்களில் உர இருப்பு மற்றும் வினியோகம் தொடர்பாக கண்காணிக்க வேண்டும். விவசாயிகள் தேவையான அளவு மட்டும், ரசாயன உரங்களை பயன் படுத்த அறிவுறுத்த வேண்டும். ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து, பசுந்தாள் உரம், உயிர் உரம், உயிர்ம உரங்களை பயன்படுத்த, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அதற்கு தேவையான உரங்கள், விதைகள் உள்ளிட்ட இடு பொருட்கள் அளவை, முன்கூ ட்டியே மதிப்பீடு செய்து, உரிய தேவை பட்டியலை அளிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை, 16ம் தேதி துவங்க உள்ளது. தமிழகத்திற்கு கூடுதலாக உரங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, பிரதமர் மோடிக்கு, ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஒதுக்கீடு அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு கூடுதலாக, 12 ஆயிரம் டன் யூரியாவை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதைப் பெற்று தேவையான விவசாயிகளுக்கு, முறையாக வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். இக்கூட்டத்தில் வேளாண்துறை செயலர் தட்சிணா மூர்த்தி, இயக்குநர் முருகேஷ், தோட்டக்கலைத்துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி