பிரச்னைகளில் அலுவலர்கள் மாட்டினால் நான் பொறுப்பல்ல அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
மதுரை:பதிவுத்துறை மாநிலப்பணி மற்றும் அனைத்து அரசு அலுவலர்கள் சங்க மாநிலப் பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. இதில் பங்கேற்ற வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:வணிகவரி மற்றும் பதிவுத்துறை வாயிலாக தமிழக அரசுக்கு, 87 சதவீதம் வருவாய் கிடைத்துள்ளது. நடப்பாண்டு பதிவுத்துறையில், 2,200 கோடி ரூபாய், வணிக வரித்துறையில், 10,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.வணிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வணிக வரித்துறையில் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பதிவுத்துறை அலுவலர்களுக்கு பதவி உயர்வில் உள்ள பிரச்னைகளை கலைந்து தீர்வு காண தயார்.பதிவுத்துறையில் குற்ற குறிப்பாணை காரணமாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 150 பணியாளர்கள் குறித்து பதிவுத்துறை செயலர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும். தவறு செய்யாத பணியாளர்களுக்கு சட்டப்படி மீண்டும் பணி வழங்கப்படும்.நடப்பாண்டு பதிவுத்துறையில், 24,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி இறுதிக்குள் பதிவுத்துறையில் 38 உதவி பதிவுத்துறை தலைவர் பணியிடங்கள் நிரப்பப்படும். தொடர்ச்சியாக அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும். வணிக வரித்துறையில் 20 நாட்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. பதிவுத்துறையில் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பதவி உயர்வு வழங்க இயலவில்லை. பதிவுத்துறை அலுவலர்கள் அவர்களாக பிரச்னைகளில் மாட்டிக் கொண்டால் நான் பொறுப்பல்ல. துறை பணியாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.