எதிர்க்கட்சியினர் பொய் சொல்றாங்க அமைச்சர் பன்னீர்செல்வம் புது விளக்கம்
தஞ்சாவூர்: ''எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் கட்சியை வளர்க்க, வேண்டுமென்றே பொய் சொல்கின்றனர். முன்னாள் முதல்வர் பழனிசாமி நாகரிகம் இல்லாமல், கோமாளி ஆட்சி என, இந்த ஆட்சியை பற்றி தவறாக பேசுகிறார்,'' என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம், கீழக்கோவில்பத்து கிராமத்தில், தொடர் மழையால், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேற்று மாலை வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார். பின் அவர் அளித்த பேட்டி: தஞ்சாவூர் மாவட்டத்தில் 7,092 ஏக்கர் பயிர்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் கட்சியை வளர்க்க, வேண்டுமென்றே பொய் சொல்கின்றனர். முன்னாள் முதல்வர் பழனிசாமி நாகரிகம் இல்லாமல் கோ மாளி ஆட்சி என இந்த ஆட்சியை தவறாக பேசி வருகிறார். அ.தி.மு.க.,வின் 10 ஆண்டுகால ஆட்சியில், 7.27 லட்சம் டன் நெல்லை சேமிக்கும் அளவுக்கு மட்டுமே கிடங்குகள் இருந்தன. நான்கு ஆண்டுகளில் 4.32 லட்சம் டன் கொள்ளளவுக்கு புதிதாக கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 3 லட்சம் டன் அளவுக்கு கிடங்குகள் கட்டப்படுகின்றன. தமிழகத்தில், குறுவை பருவத்தில் நெல் உற்பத்தி அதிகமாகியுள்ளது. இதேபோன்று சம்பா பருவத்திலும் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பழனிசாமி வருகைக்கு பின் வேகம்
தஞ்சாவூர் மாவட்டம், காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வரவில்லை என விவசாயிகள், அக்., 16ம் தேதி மறியல் செய்தனர். அதிகாரிகள் லாரிகளை கொண்டு வந்து நெல்லை எடுத்துச் சென்றனர். கொள்முதல் பணிகள் 2 நாட்கள் விறுவிறுப்பாக நடந்தது. பின், தொய்வு ஏற்பட்டதால், மழையில் நனைந்து நெல் முளைக்க துவங்கியது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அக்., 22ல் காட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பை கேட்டறிந்தார். இதனால், காட்டூர் கொள்முதல் நிலையம் மீது அதிகாரிகள் பார்வை விழுந்தது. பழனிசாமி வருகைக்கு பின், கொள்முதல் செய்வது முதல், லாரிகளில் கொள்முதல் செய்யப்பட்ட மூடைகளை எடுத்து செல்வது வரை, பணி துரிதமாக நடந்து வருகிறது. கொள்முதல் நிலையத்தின் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மூடைகளை கிடங்கிற்கு அனுப்பும் பணியும் துரிதமாக நடக்கிறது.
வரி ஏய்ப்பு செய்த வெளி மாநில
ஆம்னி பஸ்கள் பறிமுதல்
கர்நாடகாவில், வெளி மாநிலங்களின் ஆம்னி பஸ்களை இயக்க வேண்டுமானால், விதிகளின் படி உரிம வரி செலுத்த வேண்டும். ஆனால் வரி செலுத்தாமல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. வரி ஏய்ப்பு வாகனங்களை கண்டுபிடிக்கும் பணியில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இறங்கினர். நேற்று அதிகாலை பெங்களூரு ஆனேக்கல் அருகில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த நாகாலாந்து, தமிழகம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தனியார் பஸ்களை நிறுத்தி ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, வரி செலுத்தாமல் இயங்கி வந்த வெளி மாநிலங்களின், 25 பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, போக்குவரத்துத் துறை கூடுதல் கமிஷனர் ஓம் காரேஸ்வரி அளித்த பேட்டி: ஓசூர் தேசிய நெடுஞ்சாலை, ஆனேக்கல்லின் அத்திப்பள்ளி செக்போஸ்டில் நேற்று காலை, 4:00 மணியளவில் பெங்களூரின் அனைத்து இணை கமிஷனர்கள், ஆர்.டி.ஓ., அதிகாரிகள், அத்திப்பள்ளி செக்போஸ்ட் அருகில் நின்றிருந்தோம். அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்களை ஆய்வு செய்தோம். வெளி மாநிலங்களின் பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் லைசென்ஸ் விதிகளை மீறியுள்ளன. கர்நாடக அரசுக்கு வரி செலுத்தாமல் இயங்கியது தெரிந்தது. வரியை வசூலிப்பதற்காக, பல்வேறு மாநிலங்களின் பஸ்களை, நாங்கள் ஜப்தி செய்தோம். அவற்றில் இருந்த பயணியருக்கு, மாற்று ஏற்பாடு செய்தோம். நாங்கள் யாருக்கும் தொந்தரவு தரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.