மேலும் செய்திகள்
அ.தி.மு.க., அதிரடியால் ஆளுங்கட்சியினருக்கு உதறல்
20-May-2025
சென்னை:''தமிழகத்தில், இளைஞர்களிடம் தமிழ் மொழி மீதான பற்று குறைகிறதோ என்ற சந்தேகம் உள்ளது,'' என, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசினார்.சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், 'தமிழியல் ஆய்வுகள் நிகழ்ந்தனவும், நிகழ வேண்டியனவும்' என்ற தலைப்பில், 'அறிஞர்கள் அவையம்' குழுவின், முதல் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், 'அறிஞர்கள் அவையம்' குழுவுக்கான லோகோவை, அமைச்சர் சாமிநாதன் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:அமைச்சர் சாமிநாதன்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில், 'அறிஞர்கள் அவையம்' என்ற பெயரில், இனி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும். அதில், தமிழ் மொழியின் சிறப்புகளையும், தமிழர்களின் சிறப்புகளையும், உலக அளவில் பறைசாற்றும் வகையில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகள் கேட்கப்படும். அவற்றை செயல்படுத்த, ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படும். இளைஞர்களிடம், தாய்மொழியான தமிழ் மொழி மீதான ஆர்வம் குறைகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அவர்கள், தாய்மொழி மீதான பெருமையை உணரும் வகையில், இந்த அவையத்தை நடத்த வேண்டும். பேராசிரியர் முருகன்: 'தமிழ் லெக்ஸிகன்' எனப்படும் பேரகராதியில், ஒரு லட்சம் சொற்கள் உள்ளன. அவற்றில் 40,000 சமஸ்கிருத சொற்கள் கலந்துள்ளன. அதுமட்டுமல்ல, 40,000க்கும் மேற்பட்ட தமிழ் சொற்களுக்கு, சமஸ்கிருதத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இது, எதார்த்தமாக நிகழ்ந்ததாக தெரியவில்லை. திட்டமிட்டு திணிக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. முதலில், அந்த சமஸ்கிருத திணிப்பை நீக்க வேண்டும். பேராசிரியர் சுப்பிரமணியம்: வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு அகராதிகள் உருவாகும். அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும். புதிய சொற்களையும், அவற்றுக்கான பொருளையும், துணை நுால்களின் வாயிலாக புதுப்பிக்க முடியும். அந்த பணியை, குறுகிய கால திட்டம், நீண்ட கால திட்டம் என வரையறுத்து செயலாற்ற வேண்டும். அவற்றிலும், மரபு சொற்களுக்கு தனியாகவும், கல்வெட்டு சொற்களுக்கு தனியாகவும், அகராதிகளை தொகுக்க வேண்டும். தமிழ் அகராதியியல் வரலாறு அதன் வளர்ச்சி குறித்த ஆராய்ச்சிகளிலும் ஈடுபட வேண்டும்.சங்க இலக்கியத்தில் வரும் சொற்களுக்கு, முறையான அகராதிகள் மேலும் வர வேண்டும். சங்க இலக்கியத்துக்கு அகராதி இல்லை என்ற குறை நீங்க வேண்டும். தற்போது, தமிழில் நிறைய சொற்கள் உருவாகின்றன. அவற்றின் உருவாக்கத்தை கவனித்து, தொகுக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, புதிய சொற்களுக்கான துணை நுால்கள், வட்டார வழக்கு சொற்களுடன் அகராதிகள் வெளியாக வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.
20-May-2025